ஜனதா பரிவார் – ஆறு கட்சிகளின் சங்கமம் : தலைவராக முலாயம் !

janata-parivarபுதுதில்லி: முன்னர் ஜனதா கட்சியுடன் இருந்த தலைவர்கள் பின்னர் தங்களுக்கென கட்சிகளை உருவாக்கி பிரிந்து சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை எழுந்துள்ளதால், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து புதிய ஜனதா கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்தப் புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்கும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்கான கூட்டம் தில்லியில் உள்ள முலாயம் சிங் யாதவ் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், பொதுச் செயலர் கே.சி.தியாகி, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவெ கவுட, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் கமல் மொரார்கா, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மூத்த தலைவர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தங்களின் ஜனதா பரிவார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ்… இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். முந்தைய ஜனதா கட்சிகள் மீண்டும் இணைந்திருக்கின்றன. இது மிகவும் உறுதியான கூட்டணி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை குறித்து முடிவெடுப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தேவகவுட, இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசாத், ஓம்பிரகாஷ் சௌதாலா, சரத் யாதவ், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் கமல் மொரார்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள தே.ஜ.கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதே புதிய கட்சியின் குறிக்கோள். எந்தவொரு விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அராஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் முலாயம் சிங்.