டெல்லியில் 200 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி செய்து வருகிறது. மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் கெஜ்ரிவால் அரசு மின்கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படவுள்ளதாகவும், 201 முதல் 400 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு டெல்லி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டெல்லியில் பேருந்துக்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என கெஜ்ரிவால் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.




