
சாமானியர்களின் அரசியல் தலைவர் சுஷ்மா சுவராஜ்! பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சுஷ்மா சுவராஜ் பெரும் தாய் உள்ளத்துடனும் மனிதநேயத்துடனும் அணுகி இருக்கிறார்!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அதற்கு சற்று முன்னதாக காஷ்மீர் குறித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை டிவிட்டர் பதிவில் தெரிவித்த சுஷ்மா சுவராஜ் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை திரும்ப பெற்றதற்காக நன்றி பிரதமரே மிக்க நன்றி என் வாழ்நாள் முழுதும் இதற்காகத் தான் காத்திருந்தேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்
இதுதான் அவர் சமூகவலைதளத்தில் கடைசியாக பதிவிட்ட மகிழ்ச்சி கருத்து!
கிட்டத்தட்ட 13 மில்லியன் பின்தொடர்பவர்களால் டிவிட்டரில் பெரிதும் விரும்பப்படும் பெண் அரசியல்வாதியாக சுஷ்மா சுவராஜ் திகழ்ந்தார்! உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்! இந்நிலையில் தனது 67வது வயதில் நேற்று அவர் காலமானார்!
ட்விட்டரில் எடக்குமடக்காக கேள்வி கேட்பவர்கள் அல்லது கருத்து தெரிவிப்பவர்கள் பலர் உண்டு. சமூக வலைதளத்தில் அவ்வாறு வேண்டுமென்றே தங்கள் அழுக்கடைந்த மனத்தை வெளிப்படுத்து பவர்களுக்கு சுவாரசியமான பதிலடி கொடுத்திருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்!
அண்மையில் ஜூலை 20-ஆம் தேதி தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் மறைந்தபோது சுஷ்மா சுவராஜ் அவருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவு செய்திருந்தார்! அதில் அரசியலில் எதிர் துருவத்தில் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகச் சிறந்த நண்பர்களாக திகழ்ந்தவர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஷீலா தீட்சித்தின் நல்ல மனதையும் அவரது தனிப்பட்ட பண்பையும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
ட்விட்டரில் அவரை கிண்டல் செய்வதாக எண்ணி ஒருவர் சுஷ்மா சுவராஜிடம், ‘நீங்கள் ஷீலா தீக்ஷித் பற்றி குறிப்பிடுவது போல் உங்களையும் ஒரு நாள் உங்களது மரணத்துக்குப்பின் பலரும் குறிப்பிடுவார்கள்’ என்று கருத்து பதிவு செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் உங்களது இத்தகைய எண்ணத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் என்னுடைய நன்றி என்று பதிலளித்திருந்தார்.
நாடுகளுக்கிடையில் மனஸ்தாபங்கள் பிரச்சினைகள் என்று பல இருந்தாலும் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானியர்களுக்கு தாயுள்ளத்துடன் கருணை காட்டி வந்தார். குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து மெடிக்கல் விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களுக்கான மருத்துவ உதவிகளும் கிடைக்க உறுதுணையாக இருந்தார் சுஷ்மா சுவராஜ்.
பாகிஸ்தான் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் பாகிஸ்தானியருக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்! இத்தனைக்கும் அவர்கள் தூதரகத்தின் மூலம் அதிகம் கெஞ்சி கொண்டிருக்க வேண்டிய அல்லது மன்றாட வேண்டிய நிலை இல்லாமல் இருந்தது. காரணம் தனது ட்விட்டர் பதிவிலேயே அவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார் சுஷ்மா சுவராஜ்.
இதனால் பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த பெண்மணியாக விளங்கினார்! டிவிட்டர் பதிவிலேயே சுஷ்மாவுக்கு வேண்டுகோள் விடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு உடனடியாக உதவி செய்ய எமர்ஜென்சி மெடிக்கல் விசா வழங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளார். 2017இல் பாகிஸ்தானிய சிறுமி ஷெரின் சிராஜ் இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு உடனடியாக உதவி புரிந்தார்! இது அப்போது பெரும்பாலானவர்களால் இதயபூர்வமாக பாராட்டப்பட்டது!



