காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் சோனியா காந்தி நியமிக்கப் பட்டுள்ளார். காங்கிரஸ் செயற்குழு மூலம் சனிக்கிழமை நேற்று பின்னிரவு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த முறை அவர் காங்கிரஸ் தலைவரானபோது, அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி, தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ஒரு குளியலறையில் வைத்து பூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, எனவே கட்சியின் தலைவராக பதவியேற்க சோனியா காந்தி தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்குள் நுழைவதை அவரால் அப்போது தடுக்க முடியவில்லை.
கடந்த மாதம் சோனியாவின் மகன் ராகுல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னரும், தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்தார். எனது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாகவும் இருந்தார். உண்மையில், அவரது மகன் ராகுல் காந்தி, சுமார் இருபது ஆண்டுகள் சோனியா காந்தி கட்சித் தலைவராக இருந்த பின்னர், அவரிடமிருந்து தலைமைப் பதவியைப் பெற்றார்.
இருப்பினும் தாம் ராஜினாமா செய்த போது, காங்கிரஸ் கட்சித் தலைவரின் பதவி ஒரு ‘காந்தி’யிடம் செல்லக்கூடாது என்றும் இளைய தலைவரிடம் செல்ல வேண்டும் என்றும் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்தார். இருப்பினும், இறுதியில் அவரது 72 வயதான தாய் சோனியாவே மீண்டும் தலைவராகி விட்டார்.
காங்கிரஸ் செயற்குழு நேற்று மாலை சோனியாவின் பெயரை வெளியிட்ட பின்னர், சோனியா காந்தி தற்போது ஒரு ‘தற்காலிக தலைவராக’ பணியாற்றுவார் என்று தெரிவிக்கப் பட்டது. சோனியாவின் பெயரை அறிவிப்பதற்கு முன்னர், ராகுல் காந்தி தனது ராஜினாமாவை திரும்பப் பெறவேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு மீண்டும் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘காந்தி’ பெயரிலான நேரு குடும்பத்தைத் தாண்டி காங்கிரஸால் சிந்திக்கக்கூட முடியாது என்று காங்கிரஸ் செயற்குழு காட்டியிருக்கிறது சோனியா காந்தியின் மகளும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி என்ற பிரியங்கா ராபர்ட் வதேரா, காங்கிரஸ் பொதுச் செயலாளராக இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகார பூர்வமாக அரசியலில் களம் இறங்கினார். அதை அடுத்து, காங்கிரஸின் அடுத்த தலைவராக பிரியங்கா வதேரா வருவார் என்று காங்கிரஸில் பரவலாக பேசப் பட்டது. இந்திரா காந்தியின் மூக்கைப் போல் பிரியங்காவின் மூக்கு உள்ளது என்றும், இந்திராவின் தோற்றத்தில் இருப்பதால் காங்கிரஸுக்கு அவர் தலைவராக வேண்டும் என்றும் காங்கிரஸார் கூறியதாக பேசப் பட்டது. இருப்பினும், நேற்று காலையிலும் மாலை தாமதமாகவும் ராகுல் காந்தியின் பெயர் மீண்டும் கட்சித் தலைவராக அடிபட்டது. இந்நிலையில், பின்னிரவு ராகுலின் பெயர் அடிக்கப்பட்டு அவரது தாய் சோனியாவின் பெயர் எடுபட்டது.
நேற்று இரவு தாமதமாக ராகுல் காந்தியின் ராஜினாமா காங்கிரஸ் செயற்குழுவால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அவர் கட்சித் தலைவர் பதவியை அதிகார பூர்வமாக ராஜினாமா செய்த ஒரு மாதத்துக்குப் பின்னர், சோனியா ‘இடைக்காலத் தலைவராக’ நியமிக்கப் பட்டுள்ளார். இந்த திட்டத்தை குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா ஆகியோர் கொண்டுவந்தனர். இதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் ஆதரவளித்துள்ளார்.

சோனியா காந்தி, வழக்கமாக பெரும்பாலான பதவிகளை ஏற்க தயங்குகிறார், அதை அவர் விரும்புவதில்லை, இருப்பினும் இறுதியில் பொது மனநிலை காரணமாக அவற்றை ஏற்கிறார் என்றும், இந்த நேரத்திலும் அவரே கை கொடுத்தார் என்றும் காங்கிரஸார் கூறுகின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டில் அவர் தனது உள் மனசின் குரலைக் கேட்டு, தனது பிரதமர் பதவி வற்புறுத்தலைக் ‘கைவிட்டார்’ என்றும், இந்த முறையும் அவர் ‘இக்கட்டான இந்த சூழ்நிலையிலிருந்து கட்சிக்கு உதவுவதற்காக’ மீண்டும் கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்றும் கூறுகின்றனர் காங்கிரஸார்.
அடுத்து, காங்கிரஸ் செயற்குழுவில் முழுமையான தேர்தல்கள் நடைபெறும் வரை சோனியா கட்சியின் ‘இடைக்கால’ தலைவர் பதவியில் இருப்பார். ஒருவேளை அவர் தனது மகள் பிரியங்கா காந்திக்கு இந்த தலைவர் பதவியை மடைமாற்றி விடலாம். பிரியங்காவும் ஒரு தயக்கமற்ற அரசியல்வாதி, குடும்பத்தின் மற்றவர்களைப் போலவே எப்போதும் பொது மனநிலையோடு செல்பவர்தான்!
‘காந்தி’ பெயரிலான நேரு குடும்பத்தவர் அல்லாத ஒருவர் கட்சித் தலைவரானால், கட்சி ‘சிதைந்துவிடும்’ என்று காங்கிரஸில் சிலர் நம்புகின்றனர்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், மிலிந்த் தியோரா என காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு சிலரது பெயர்கள் அடிபட்டன என்பது குறிப்பிடத் தக்கது.



