“என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?”
(இத்தனை பெரிய மனுஷா( முதல்வர் சென்னா ரெட்டி + இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்) தரிசனத்துக்கு வந்திருக்கறச்சே கூட சாஸ்திரத்தை விட்டுக் குடுக்காம சரியான நேரத்துல நதிக்கரைக்கு வந்து-பக்தரின் ஆசையை நிறைவேற்றின பெரியவா)
நன்றி- குமுதம் லைஃப்
06-09-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மகாபெரியவாளோட பரமபக்தர் ஒருத்தர் இருந்தார். வைஷ்ணவர்தான்னாலும் பெரியவாளும்,பெருமாளும் ஒருத்தார்ன்கற அளவுக்கு பக்தி உள்ளவர்.
ஒரு சமயம் காசியாத்திரை பண்ணிட்டு அங்கேர்ந்து கங்காஜலத்தை எடுத்துண்டு வந்து தன்னோட அம்மாகிட்டே குடுத்தார். அவர், அவரோட தாயாரும், ஆசார்யாமேல ரொம்ப பக்தி உள்ளவாதான். பிள்ளை குடுத்த கங்காஜல செம்பை வாங்கி கண்ணுல ஒத்திண்டா.
“இந்த கங்கா ஜலத்தை மகாபெரியவாகிட்டே குடு. அதை அவர் அமாவாசை ஸ்நானம் பண்றச்சே உபயோகப்படுத்திக்கணும்னு வேண்டிக்கோ. எனக்கு அதான் பரம திருப்தி!”ன்னு சொன்னா.-அம்மா
‘ஆகட்டும்’னு சொன்ன பக்தர் கொஞ்ச நாள் கழிச்சு, பெரியவாளை தரிசிக்க புறப்பட்டார். அப்போ, கர்நாடகாவுல ஹம்பியில் உள்ள ஒரு சின்னக் கோயில்ல தங்கியிருந்தார் பரமாசார்யா.தற்செயலா அன்னிக்கு அமாவாசை அமைஞ்சிருந்தது.
காசிச் செம்பை மகாபெரியவா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் செஞ்சார் பக்தர்.”பெரியவா இந்த கங்காஜலத்தை…” முடிக்கறதுக்குள்ளே, கோயில் வாசல்ல ஒரே பரபரப்பாச்சு.
மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக, ஆந்திராவோட அப்போதைய முதல்வர் சென்னா ரெட்டி வந்திருந்தார். உடனே பாதுகாப்பு அது இதுன்னு போலீஸ்காரர் சுத்தி வந்ததுலதான் பரபரப்பாகியிருந்தது.
“என்ன,காசி யாத்ரை நன்னா முடிஞ்சுதா!” பேசத் தயங்கி நிறுத்தியிருந்த பக்தர்கிட்டே பெரியவாளே ஆரம்பிச்சார்.
“உங்க ஆசிர்வாதத்துல க்ஷேமமா போய்ட்டு வந்தேன். சுவாமி தரிசனம் எல்லாம் நன்னா ஆச்சு. அங்கேர்ந்துதான் கங்கா ஜலம்…..” இந்த முறையும் அவர் சொல்லி முடிக்கறதுக்குள்ளே மறுபடியும் சலசலப்பு எழுந்தது.
பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதுக்காக இங்கிலாந்துலேர்ந்து இளவரசர் சார்லஸ் அங்கே வந்திருந்தார்.அவரோட நூறுபேர் செக்யூரிட்டி காரணங்களுக்காக வந்திருந்தா.இங்கே உள்ளூர் போலீசும் அவாளுக்கு வேண்டியதை செஞ்சு தர்றதுக்காக மத்தவாளை ஒதுங்கச் சொல்லிண்டு இருந்தா.அந்த சலசலப்புதான் அது.
எல்லாருமா சேர்ந்து, வந்த முக்கியஸ்தர்களை மகாபெரியவா முன்னால அழைச்சுண்டு வந்ததுல பக்தர் கொண்டு வந்த காசிச் செம்பு ஏதோ ஒரு தட்டோட எங்கேயோ ஒரு மூலைக்கு போய்டுத்து .அந்த பக்தரும் சொல்ல வந்ததை முழுசா சொல்றதுக்கு முன்னால அங்கேர்ந்து நகர்ந்துக்க வேண்டியதாயிடுத்து.
வந்தவா எல்லாரும் கொண்டுவந்த பழங்கள்,பூக்கள் மாலைகள்னு எல்லாமும் பெரியவா முன்னால நிரம்பி வழிஞ்சுது
.
வந்தவா தரிசனம் பண்ணிட்டு கிளம்பறச்சே கிட்டத்தட்ட மூணு மணியாகிடுத்து. புஷ்பம்,பழங்கள் எல்லாத்தையும் உள்ளே எடுத்து வைக்க ஆரம்பிச்சா மடத்து சிப்பந்திகள்.
அப்போ தனக்குப் பக்கத்துல இருந்த மூங்கில் தட்டை எடுக்க வந்தவர்கிட்டே ஏதோ கண் ஜாடை காட்டினார் பெரியவா. அதைப் புரிஞ்சுண்ட அந்த சிஷ்யர் அந்தத் தட்டுல பூக்குவியலுக்கு உள்ளே மறைஞ்சு இருந்த காசிச்செம்பை எடுத்து பெரியவா முன்னால வைச்சார்.
அதைப் பார்த்ததும் அந்த பக்தருக்கு ஆனந்தத்துல நெஞ்சு விம்மித்து. இத்தனை பரபரப்புலயும் பரமாசார்யா இதை ஞாபகம் வைச்சுண்டு இருக்காரேன்னு சந்தோஷத்துல அவரோட கண்ணுலேர்ந்து ஜலம் பெருகி வழிஞ்சுது. அதைவிட அதிசயம் அடுத்து நடந்தது.
பக்கத்துல இருந்த தண்டத்தை எடுத்த பெரியவா, சட்டுன்னு அதை ஊன்றிண்டு எழுந்தார். பக்கத்திலிருந்த பாரிஷதரிடம், கண்ஜாடை காட்டினார்.அவர்,அங்கிருந்த கங்கைச் செம்பை எடுத்துக்கொண்டு பெரியவாளுடன் நடந்தார்.
“பெரியவா ஸ்நானம் பண்ணப் போறா.. இன்ன்னிக்கு சரியா மூணு இருபதுக்குதான் அமாவாசை பொறக்கறது. கரெக்டா அதே நேரத்துக்கு ஸ்நானம் பண்ண துங்கபத்ரைக்கு வந்துட்டார். இத்தனை பெரிய மனுஷா தரிசனத்துக்கு வந்திருக்கறச்சே கூட சாஸ்திரத்தை விட்டுக் குடுக்காம சரியான நேரத்துல நதிக்கரைக்கு வந்துட்டார்!” யாரோ சொல்லிண்டது அந்த பக்தர் காதுல விழுந்தது.
ஆனா,தன்னோட ஆத்மார்த்தமான வேண்டுதலும்,தன் தாயாரோட மானசீகமான ஆசையையும் நிறைவேத்தறதுக்காகவே பரமாசார்யா அங்கே ஸ்நானத்துக்கு வந்திருக்கார்னே தோணித்து அவருக்கு.
அது ஆமான்னு சொல்லாம சொல்றமாதிரி, துங்கபத்ராவுல இறங்கி ரெண்டுதரம் முங்கி ஸ்நானம் பண்ணின பரமாசார்யா அடுத்ததா ஜாடை காட்ட, பக்கத்துல இருந்த பாரிஷதர் காசிச் செம்பை திறந்து அதுல இருந்த கங்கா ஜலத்தை அப்படியே மகாபெரியவா சிரசுல கவிழ்த்தார்.
பரமேஸ்வரன் ஜடாபாரத்துலேர்ந்து கங்காதேவி பெருகி வழியறாப்புல பரமாசார்யா சிரசைத் தொட்ட சிலிர்ப்போட பெருகி வழிஞ்சு துங்கபத்ராவுல கலந்து ஆனந்தமா ஓடினா கங்காதேவி.
கரை ஏறின பரமாசார்யா அந்த பக்தரை ஒரே ஒரு விநாடி திரும்பிப் பார்த்தார். “என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?” அப்படின்னு கேட்காம கேட்ட அந்தப் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட பக்தர் பரம சந்தோஷமா அங்கேர்ந்து புறப்பட்டார்.



