குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம்: எடப்பாடியார் வேண்டுகோள்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
edappadi palanisamy2 - 2026

குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!

திருவாரூர் மாவட்டம் கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் திவ்யா, மகன் ஸ்ரீராம் ஆகியோர் வீட்டிற்கு அருகிலுள்ள திருமலைராயன் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தனர்.

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ வாஞ்சியம் செங்கனூர் கிராமங்களைச் சேர்ந்த கஞ்சமலை மகன் விக்னேஸ்வரன் நடராஜன் மகன் வெங்கடேஷ் ஆகியோர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது உயிரிழந்தனர்.

இதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நீர்நிலைகளில் குளிக்கும்போது காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்க வேண்டும்; குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி அருகே குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிவகிரியை அடுத்துள்ள மேலகரிசல்குளத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜெயசிங் (9), மற்றும் ராமர் மகன் கதிரேசன் (10), ஆகியோர் நேற்று முன்தினம் (செப்., 30) அந்த பகுதியில் உள்ள குளத்தில் நண்டு பிடித்து விளையாட சென்றுள்ளனர்.

இதில் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் குளத்தில் மூழ்கினர். இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தில் தேடினர்.

இந்நிலையில் நேற்று குளத்தில் தேடிய போது இருவரின் உடல்களையும் கண்டறிந்து மீட்டனர். சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.