
பாரத கலாசாரத்தின் ஆணி வேரான தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையே இருந்த வரலாற்று தொடர்புகளை அறிந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபருடனான சந்திப்புக்கு மகாபலிபுரத்தை தேர்வு செய்தாகக் கூறப் படுகிறது!
சீன இந்திய உறவுகள் தொடர்பாகவும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று இந்தியா வந்தார். தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி இடையேயான சந்திப்பும் பேச்சுவார்த்தையும் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
நாட்டில் எத்தனையோ பெரு நகரங்கள், பாரம்பரியப் பெருமை மிக்க இடங்கள் பல இருந்தும், தமிழகத்தின் கடற்கரை சுற்றுலாத் தலமான மகாபலிபுரம் இந்த சந்திப்புக்கு ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தன.
பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமானவர். எதையும் அதிரடியாக செய்பவர். அரசு சந்திப்புகள் முக்கியமான நிகழ்ச்சிகளை எல்லாம் பெரும்பாலும் தலைநகர் தில்லியில் தான் வைப்பார்கள். இதனால் இந்தியா என்றால், தில்லி என்று மட்டுமே வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியும். இதை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி.
தாஜ்மஹால் மட்டுமே இந்தியாவின் அடையாளம் இல்லை… அதையும் தாண்டி எத்தனையோ அடையாளங்கள் உள்ளன என்று உலகுக்கு சொன்னார் மோடி. நம் பிரதமர் நரேந்திர மோடியே நம் பாரத தேசத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லி, நாட்டின் சுற்றுலாவை வெளிநாட்டினருக்கு பரப்பும் தூதராகவும் இருந்து மற்றவர்களை வழி நடத்துகிறார்..!
2019 : ஜி ஜின்பிங்-சைனா : மஹாபலிபுரம்
2018 : மாக்ரான்-ஃப்ரான்ஸ் : வாரணாசி
2018 : நெதன்யாஹு-இஸ்ரேல் : அஹமதாபாத்
2017 : அபே-ஜப்பான் : அஹமதாபாத்
2016 : ஃப்ரான்கோயிஸ் ஹாலந்தே-ஃப்ரான்ஸ் : சண்டிஹார்
2016 : அஷ்ரஃப் க்யானி-ஆஃப்கானிஸ்தான் : அம்ரித்ஸர்
2015 : அபே-ஜப்பான் : வாரணாசி
2015 : ஆஞ்செலா மார்க்கல்-ஜெர்மனி : பெங்களூரு
2014 : ஜி ஜின்பிங்-சைனா : அஹமதாபாத்
என்று, இதுவரை எந்த ஒரு தலைவரும் நம் பிரதமர் மோடி போல் மாற்றி யோசிக்கும் திறமை படைத்தவராக இருந்ததில்லை என்று பெருமிதம் பொங்க டிவிட்டர் பதிவுகளில் பகிர்கின்றனர் பலர்.

அண்மையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. தனது தொகுதியான வாராணசி, குஜராத்தின் ஆமதாபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் என்று அடுத்தக் கட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களிலும் இந்த சந்திப்புகளை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில் பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு, தமிழகத்தில் நடப்பது, உலக நாடுகளின் பார்வையை தமிழகத்தின் மீது பதிய வைத்துள்ளது. எதற்காக இந்த சந்திப்புக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டது யார் தேர்வு செய்தார்கள் என பலரும் கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் இதற்கு காரணம் பிரதம மோடியே என்பது தெரிய வந்துள்ளது.
இரு பெரும் நாடுகளின் சந்திப்பு; பொருளாதாரப் போட்டியில் அடித்துப் பிடித்து முன்னேறும் இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு என்பதால் மட்டுமல்ல… அண்மைக் காலமாக அமெரிக்காவுடனான சீனாவின் உரசல்களும், அமெரிக்க அதிபருடன் நெருக்கம் காட்டிய மோடி தற்போது சீன அதிபரை சந்திப்பதும், உலக நாடுகளின் பார்வையை இந்த சந்திப்பில் திருப்பியிருந்தது.

இத்தகைய சூழலில், உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது மட்டுமல்ல… தமிழகத்தின் மீதே திருப்பியுள்ளது. காரணம், சீனாவுக்கும் பண்டைய தமிழ் மன்னர்களுக்கும் இடையே இருந்த வர்த்தகப் பிணைப்பு, கலாசாரப் பரிமாறல்கள், ஆன்மிக பரிமாற்றங்கள் அனைத்தும்தான்!
சீனத்தின் போதி தர்மர் தமிழகத்தின் காஞ்சியைச் சேர்ந்த மகான் என்பதும், தமிழக சித்தர்களில் ஒருவரான போகர் மற்றும் அவர் சீடர் புலிப்பாணி முனிவர் ஆகியோருக்கும் சீனத்துக்குமான பண்டைய தொடர்புகளும் சீன அதிபரை இந்தியாவுக்கு அழைத்து வரும் போது, குறிப்பாக தமிழகத்துக்கு வர வைத்து, இந்த வரலாற்றுத் தொடர்புகளை விளக்கலாம் என்பது பிரதமர் மோடியின் கருத்தாக இருந்தது.
பிரதமர் மோடி, சீன இந்திய தொடர்புகளை பற்றி ஆராயும் போது மாமல்லபுரத்தின் பெருமையை பற்றி அறிந்துள்ளார். அவரது தொகுதியான வாரணாசி அல்லது அவரது சொந்த மாநிலம் குஜராத் மற்றும் சில நகரங்களில் இந்த சந்திப்பை வைத்து கொள்ளலாம் என அதிகாரிகள் அவருக்கு பரிந்துரை செய்த போது, அவற்றை மறுத்து, பிரதமர் மோடி மாமல்லபுரத்தையே தேர்வு செய்தார்.
ஏழு மற்றும் எட்டாம் நுாற்றாண்டுகளில் பல்லவர் காலத்து புகழ்மிக்க கடற்கரை நகரமான மாமல்லபுரத்துக்கு சீனாவுடன் வரலாற்று தொடர்பும் உண்டு. பண்டைய காலத்தில் சீனாவுடன் வணிக தொடர்பு வைத்திருந்த நகரங்களில் மாமல்லபுரமும் ஒன்று. வெளிநாட்டு ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்துக்கு நுழைவுவாயிலாக இருந்தது.

சீன வெளியுறவு இணை அமைச்சரும், முன்னாள் இந்திய துாதருமான லுப் ஜாஹூயி மாமல்லபுரம் குறித்து நன்கு அறிந்திருந்தார். அவரும் சீன அதிபர் அலுவலகத்துக்கு சாதகமான தகவல் அளித்தார்!
சீனாவுக்கும், தமிழகத்திற்கும் இடையே 2ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உள்ள கலாசார வரலாற்றுத் தொடர்பை அறிந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நெகிழ்ந்து போய் மாமல்லபுரத்துக்கே வருவதாக தன் ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேறு எந்த இடத்தில் இந்த இரு தலைவர்களின் சந்திப்பு நடந்திருந்தாலும் இப்படியொரு நெகிழ்ச்சி ஜின்பிங்குற்கு கிடைத்திருக்காது. அதனைத் தம் இன்றைய பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார் ஜி ஜின் பிங்.
- கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!
- அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!
- IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!
- திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!
- மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!
- பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!


