
டிடிவி தினகரனைத் தவிர அதிமுகவில் யார் இணைந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவுக்கு எதிராக திமுக தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். அதிமுக பிளவுபட காரணமாக இருந்த டிடிவி தினகரனை தவிர்த்து அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைய யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெறுவது குறித்து ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாக, கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளியானது. அது குறித்து கருத்து தெரிவித்த அவர், நான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக பேசியதாக தவறான கருத்தை திமுகவினர் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.
சிறுபான்மையினர் வாக்குகளை பெற திமுகவினர் மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. இஸ்லாமிய மக்களை தூண்டும் விதத்தில் கலவரத்தை ஏற்படும் விதத்தில் கருத்து பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

என்னுடைய தொப்புள் கொடி உறவான என் முஸ்லீம் மக்களை அப்பு என்ற முறையில் உறவு கொண்டாடி வருகிறேன். என்னைப் பற்றி விருதுநகர் மாவட்ட முஸ்லீம் மக்களிடம் கேட்டு பாருங்கள். பின்பு திமுகவினர் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உங்கள் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்… என்றார்.
இதனிடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், பொறுப்பில் இருந்து கொண்டு ராஜேந்திர பாலாஜி, பிறரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதாக குற்றம்சாட்டினார். இஸ்லாமியர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்ததற்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்தார்.



