
‘தடை செய்யப் பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்துவரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயகுமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இது குறித்து ஜெயகுமார் கூறியவை…
‘ராஜீவை நாங்கள்தான் கொன்றோம்; தமிழ் மண்ணில் புதைத்தோம்’ என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதுடன், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் படத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்கிறார்; இது தேர்தல் விதிமீறல். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேட்டதற்கு ‘மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்’ என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
நாங்குநேரியில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வாக்குச் சாவடிகளை கைப்பற்ற திட்டம் தீட்டப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளேன்.
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற காவல் துறையை பயன்படுத்த ஆளும் கட்சி திட்டம் தீட்டியுள்ளது. எனவே வாக்குச் சாவடிகளில் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தோம்; அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்… என்றார்.



