புதுடில்லி: 'செல்பி' எடுக்க, மாணவியருக்கு தடை விதித்த கல்லுாரியிடம் விளக்கம் கேட்டு, டில்லி பெண்கள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
*தடை:*
டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி பல்கலையின் கீழ் இயங்கும் ஒரு கல்லுாரி, அங்கு படிக்கும் மாணவியர், கல்லுாரி வளாகத்தில், 'செல்பி' எடுக்கவும், கலைந்த தலைமுடியை சீவவும் தடை விதித்து உள்ளது. கல்லுாரி நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு, மாணவியர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
*புகார்:*
இது குறித்து, டில்லி மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரை ஏற்ற ஆணையம், இந்த விவகாரம் குறித்து, ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி, கல்லுாரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
*அறிவுறுத்தல்:*
இது குறித்து, கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: கல்லுாரி வளாகத்தில், மாணவியர் செல்பி எடுப்பது, கலைந்த தலைமுடியை சரி செய்வது போன்ற நடவடிக்கைகளால், அவர்களின் கவனம் திசை திரும்ப வாய்ப்புள்ளது. ஒழுக்கத்தை போதிக்கும் கல்லுாரியில், அலங்காரத்திற்கு அவசியம் இல்லை என்ற வகையிலேயே, மாணவியருக்கு அறிவுறுத்தினோம்.
செல்பி எடுக்க வேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளோமே தவிர, கட்டாய உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எங்கள் தரப்பு விளக்கத்தை, பெண்கள் ஆணையத்திடம் தெரிவிப்போம். இவ்வாறு கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



