போபால்: சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எடுத்த உடனடி நடவடிக்கையால், பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு, மறுவாழ்வு கிடைக்க உள்ளது.
*இதய கோளாறு*
ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இங்குள்ள போபாலைச் சேர்ந்த, திவேஷ் சர்மா – வந்தனா தம்பதிக்கு, சமீபத்தில், ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அதற்கு இதய கோளாறு இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக, அதிநவீன அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, குழந்தை உயிர் பிழைக்கும் என்றும் கூறினர்.
*டுவிட்டரில் தகவல்*
குழந்தையின் நிலையை எண்ணி வருந்திய, திவேஷ், இது குறித்து, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜுக்கு, டுவிட்டரில் தெரிவித்தார். அமைச்சரின் உத்தரவின்படி, குழந்தையின் உடல் நிலை குறித்த அறிக்கைகளை, எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.இதையடுத்து, அந்த குழந்தைக்கு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்ய, சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம், திவேஷ் – வந்தனா தம்பதியின் குழந்தையை, டில்லிக்கு அழைத்துச் செல்வதற்கான பணிகள் நடக்கின்றன. குழந்தையின் உயிர் காக்க, விரைந்து நடவடிக்கை எடுத்த, சுஷ்மா சுவராஜுக்கு, பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்



