தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மேலும் 10 நாட்கள் சஸ்பென்ட்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின் போது அமளியில் ஈடுபட்டதாகக் கூறி சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மேலும் 10 நாட்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. சட்டசபையில் பிப்.19-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அமளி ஏற்பட்டது. அப்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் அவைத்தலைவர் இருக்கையை நோக்கி வேகமாகச் சென்றனர். அவர்களை அவைக் காவலர்கள் தடுத்தபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகரையும் சபை காவலரையும் தாக்க முயன்றதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களான மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகியோர் அந்தக் கூட்டத் தொடர் மற்றும் தற்போதைய கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்ப்பட்டதுடன் இப்பிரசனை உரிமைக் குழுவுக்கு அனுப்பப் பட்டது. உரிமைக் குழு ஆராய்ந்து எடுத்த முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தது. இதனிடையே தற்போதைய கூட்டத் தொடரில் தங்களை அனுமதிக்கக் கோரி நடவடிக்கைக்கு உள்ளான உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்திலேயே தர்ணா போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் சட்டசபையில் உரிமைக் குழு முடிவை சபை முன்னவரான அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார். அதன்படி, தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 6 பேரும் சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு மேலும் 10 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது; இது அடுத்த கூட்டத் தொடருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.