
அரிய வானிலை நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று காலை தொடங்கியது – பகல் 11.15 மணி வரை இந்த கிரகண நிகழ்வு நீடிக்கும்!
அரிய வானிலை நிகழ்வான வளைய சூரிய கிரகணம் தொடங்கியது. பகல் 11.15 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவின் கடல் பகுதியில் வளைய சூரிய கிரகணம் தென்படத் தொடங்கியது. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்கள் கண்டு வருகிறார்கள்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஆலயங்களில் சந்நிதி நடை அடைக்கப் பட்டது.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை கோயிலின் நடை காலை 7.47 மணி அளவில் சாத்தப்பட்டது. மீண்டும் 11.30 மணிக்கு சபரிமலை கோயிலின் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை செய்துள்ளது. மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு அனுமதித்த நிலையில் சூரிய கிரகணத்தால் சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் நடை அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருநள்ளாறில் நடை திறக்கப் பட்டுள்ளது.



