சென்னை :
சென்னையில் அம்மா உணவகம் மூலம் பண விநியோகம் நடைபெற்றுள்ளது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. இந்ததேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலை இருப்பதால் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெறலாம் என்று தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே தகவல் வெளியானது.
தேர்தல் கமிஷன் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரித்து வருவதால் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா தொடங்கி விட்டது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பணபட்டுவாடா நடந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. லட்சக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையமும் மிகவும் விழிப்பாக கண்காணிப்பதால் வீடு தேடிச் சென்று பணபட்டுவாடா நடப்பது தவிர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சமூக நலக்கூடங்கள் போன்ற பொதுவான இடங்களில் வாக்காளர்களை வரவழைத்து ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை எல்லாம் விட கொடுமையாக, வாக்காளர்களுக்கு கூப்பன்கள் வழங்கி அம்மா உணவகங்களில் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வினியோகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, விதவிதமான முறையில் பணப்பட்டுவாடா நடப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
தேர்தல் ரத்தாகுமா? தினகரன் வேட்பாளர் தகுதி நீக்கமா?
தங்களுக்கு தினகரன் ஆள்கள் ரூ.4000/- பணத்தை கொடுத்தனர் என ஆர்.கே.நகர் மக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான பெண்கள் சாட்சி சொல்லவும் தயார் என கூறியுள்ளதால் முடிவெடுக்க நிர்பந்தத்தில் தேர்தல் கமிஷன் உள்ளது.எனவே இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.



