தாற்காலிக ஓட்டுநர் நடத்துனர் தேவை: வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசு அறிவிப்பு

சற்றுமுன் தமிழகம்

TNSTC buses indefinite strike - 2026

சென்னை:
தாற்காலிகமாக பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என்று, போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போக்குவரத்துப் பணியாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில், ‘போக்குவரத்துப் பணியாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிப்போம்’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.

அதன்படி, வேலைநிறுத்த நாட்களில் பேருந்துகளை இயன்ற அளவு இயக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், தாற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான பேட்ஜ் மற்றும் உரிமம் உள்ளவர்கள் உடனடியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளரை உரிய சான்றிதழ்களோடு அணுகலாம் என அது தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் பாதிப்புக்கு உள்ளாகமல் இருக்க, 2,000 பேருந்துகள் வரை இயக்கப்படும் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை பல்லவன் இல்லத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருடன் இன்று காலை வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர். இதை அடுத்து மேற்கொண்டு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.