
சென்னை:
உலமே சிரிக்கும் வகையில் போராட்டம் நடக்கும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணுவை சந்தித்துப் பேசினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “தில்லியில் அண்மையில் 16 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடி விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்தோம். தில்லியில் இருந்து திரும்பிய பின்னர் முதல்வரைச் சந்தித்துப் பேசுவதற்காக இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்தோம்; ஆனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. வேளாண் துறை அமைச்சரையும், துறைச் செயலரையும் சந்தித்தோம். இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சென்னை சேப்பாக்கத்தில், காந்திய வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தோம். அது சிறிய போராட்டமாக இருக்காது. உலகமே சிரிக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய போராட்டமாக அமையும்” என்று கூறினார்.
முன்னதாக, முதல்வரைச் சந்திக்க அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், நேற்று காலை 11:15க்கு தலைமைச் செயலகம் வந்தனர். ஆனால் முதல்வரைச் சந்திக்க உரிய அனுமதி பெறாததால், விவசாயிகளை உள்ளே விட போலீசார் மறுத்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘முதல்வர் தில்லி செல்வதால் அவரால் விவசாயிகளை தற்போது சந்திக்க இயலாது’ என, போலீசார் கூறியதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.



