நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி பணியாளர்கள் என தினமும் ஒலிபெருக்கி வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் தயாரித்து மாவட்ட நிர்வாகத்தால் அச்சடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தினசரி காய்கறி சந்தையில் பொது மக்களுக்கு வழங்கினார். உடன் கோட்டாச்சியா் .பழனிகுமாா் மற்றும் அரசு அலுவலா்களும் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
பொது மக்களை தேவையில்லாமல் வெளியே நடமாட விடாமல் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பொதுவில் வலம் வரும் காவலர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு காவல்துறைக்கு தென்காசி ஆஸ்கார் மருத்துவ வினியோக ஏஜென்சி சார்பில் அதன் உரிமையாளர் மணிவண்ணன் முக கவசங்கள், கையுறைகள் வழங்கி வருகிறார்.
தென்காசி ,செங்கோட்டை காவல் நிலையங்களுக்கும், மக்கள் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் காவலர்களுக்கும் மற்றும் பிற காவல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முக கவசம், சானிட்டரி லிக்யூட் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை அவர் வழங்கி வருகின்றார்.
செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமாரிடம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இது போல், தனிநபர்களாக தையல்கலைஞர்களும் தற்போதைய தேவையான சூழலைக் கருதி, முககவசங்களைத் தயாரித்து, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் பாம்பே ஸ்டோர்ஸ் அருகில் டெய்லர் மாரியப்பன் இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 50 பேருக்கு இலவசமாக முககவசம் தயாரித்து வழங்கினார். இதே போன்று தையல் கலைஞர்கள் அந்தந்த பகுதியில் செய்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் பாராட்டினர்.