நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலிகள், இங்கு பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டு வாடகை கொடுக்காததால், திருப்பூரில் வட மாநிலத் தம்பதியர்களை வீட்டின் உரிமையாளர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த பரமசிவன்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60). இவருக்குச் சொந்தமாக உள்ள 30 வீடுகளில், கிட்டத்தட்ட 90 வட மாநிலத் தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இதில் ஒடிசாவை சேர்ந்த பிஜய் பார்ஜோ – சிபானி தம்பதி வேலைக்கு செல்ல முடியாததால் வாடகை கொடுக்க முடியாத சூழலில் இருந்துள்ளனர். ஆனால் வீட்டின் உரிமையாளர் பாலசுப்ரமணியன், `வாடகை கொடுக்கலைன்னா தண்ணி, கரன்ட் எல்லாத்தையும் கட் பண்ணிடுவேன்’ எனத் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அந்த தம்பதி கண்ணீர் மல்க நடுரோட்டில் நின்றபடி வீடியோவாக பேசி அதை பேஸ்புக்கில் பதிவிட்டனர். மேலும், அருகிலிருந்த வடமாநில நண்பர்களோடு சென்று பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.
புகாரின் அடிப்படையில் உரிமையாளரான பாலசுப்பிரமணியன் (60), அவருடைய மனைவி புஷ்பா (55) மற்றும் மருமகன் செந்தில் (34) ஆகிய மூவர் மீதும் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஏற்கனவே புகார் வந்த நிலையில் போலீசார் உரிமையாளர் பாலசுப்ரமணியனை கண்டித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர் வடமாநில தம்பதியரை தாக்கியது குறிப்பிடத்தக்கது.