மதுரை நகரில் இன்று காலை முதலே கடைகளுக்கு மக்கள் அத்தியவசிய பொருட்கள் வாங்க படையெடுத்து வருகின்றனர். .
தமிழக அரசு ஏப்.26ஆம் தேதி முதல் ஏப்.29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்ததால், மதுரை நகரில் பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க வேண்டும் என்று முண்டியடித்து காலை முதலே களத்தில் இறங்கினர். பல மணி நேரம் கடைகள் முன்பாக இடைவெளி விட்டு வரிசையாக நின்று பொருட்களை வாங்கக் குவிந்தனர்.
மதுரை நகரில் சிம்மக்கல், அண்ணாநகர், யாகப்பநகர், கே.கே.நகர், புதூர், கருப்பாயூரணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விலைக் கடைகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பொருட்களை வாங்கிச் சென்றனர். ரவை, சமையல் பொடிகள் ஆகியவை சரிவர கிடைக்கவில்லை. சில இடங்களில் டீத்தூள், கிடைக்கவில்லை என்று புகார் கூறப் பட்டது.
பால் தயிர் கிடைத்தாலும், டீத்தூளுக்கு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. காபிக் கொட்டை வரத்து இல்லை என்று கைவிரித்ததால், காபி ’கட்’ ஆகிவிட்டது.
இந்த ஊரடங்கு காலத்தில், வண்டிகளில் விற்பனயாகும் பால், காய்கறிகளை அனுமதிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி: ரவிசந்திரன், மதுரை