
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதித்த 4 பேர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்ததாக கூறப்படுகிறது. கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து பாதிப்புகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை ஏற்புடையதா என்பது குறித்து விளக்கவும் , பரிசோதனைகளை மேற்கொள்ளவும் 21 மருத்துவர்களுககு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தியது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இந்தூர் பகுதியில் கொரோனா பாதித்த 4 பேர் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்தூரின் சுகாதார அதிகாரி கூறுகையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது.பாதிக்கப்பட்ட 4 நபர்களில் 26 வயது பெண் உட்பட மற்ற 3 பேர் ஆண்கள் எனவும் முழுமையாக நோயிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது பரிசோதனை செய்யப்பட்ட வெற்றிதான். இதுகுறித்து ஐசிஎம்ஆரிடம் தகவல்கள் தெரியப்படுத்த வேண்டும். இந்தூரில் 1,699 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில் 595 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்தனர். 83 பேர் வரை பலியாகியுள்ளனர். சில மருத்துவமனைகளில் பரிசோதனை முறையிலான முயற்சிகளை தவிர , கொரோனா தொற்று சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு இன்னும் ஐசிஎம்ஆர் அங்கீகாரம் அளிக்கவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.