கொரானாவின் தாக்கம் இருக்கிறதோ இல்லையோ, அதைவிட இந்த மீடியாக்களிலும், செய்தித் தாள்களிலும் குறிப்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் நம்பகமற்றத் தகவல்கள் பொதுமக்களை அச்சமடையச் செய்து வருகின்றன.
எதை நம்புவது, எதை புறம் தள்ளுவது என்பதை அறிந்து கொள்ள முடியாத சூழலில், ஆரோக்கிய சேது எனும் செயலியை மத்திய அரசு உருவாக்கி, அதை ஒவ்வொரு இந்தியனும் தனது செல்போனில் நிறுவிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. இந்தியாவில் 8 கோடி பேர் இதுவரை ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோடு செய்து பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக இணையதளத்திலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இதுதொடர்பாக அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கருத்துகள் பரவலாக வெளிவரவில்லை. இந்தக் குறையைப் போக்கும் விதமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ), தற்போது புதிய இணையதளத்தை http://covid-gyan.in தொடங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் காணப்படும் இந்த இணையதளத்தி்ல், கொரானா குறித்த கட்டுரைகள், வீடியோக்கள், வரைபடவிளக்கம், அறிவியலாளர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வெளியிடும் தகவல்கள், மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுரைகள் ஆகியவற்றுக்கான தொடர்புகள் (லிங்க்) கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையில் வரைபட விளக்கமும் இடம் பெற்றுள்ளன.
உண்மைத் தகவல்களை, அறிவியல்பூர்வமாக கொரானா குறித்த அறிய விரும்புவோர் இந்த இணையதளத்தையும் http://covid-gyan.in பின்தொடரலாம்!