பால் வளத்துறையில் தனியார் முதலீடு… இந்திய பால் வளத்தை அழிக்கும்!: எச்சரிக்கும் பால் முகவர்கள் சங்கம்!

Published:

milk 1

பால் வளத்துறையில் தனியார் முதலீடுகள், இந்திய பால் வளத்தை அழிக்கும் என்று பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர், மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்த அறிக்கையில்…

2018-2019ம ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 187மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாக திகழ்ந்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஆனால் உலகமயமாக்கல் கொள்கை காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பால் வணிகம் செய்ய காலடி எடுத்து வைத்த பிறகு உள்நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட்டணி சேர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கொடுப்பதில்லை. அதே சமயம் நுகர்வோருக்கான விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி வைத்துள்ளன.

இந்த சூழ்நிலையில் கொரானா நோய் தொற்று காரணமாக மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கினால் வணிக ரீதியிலான பால் பயன்பாடு என்பது கணிசமாக குறைந்து போனதால் அதனை சுட்டிக் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை நிறுத்தத் தொடங்கியதோடு, வணிக ரீதியிலான பால் விற்பனை குறைந்து போனதை காரணமாக வைத்து லிட்டருக்கு 15.00 ரூபாய் வரை பால் கொள்முதல் விலையை குறைத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பால் கொள்முதல் விலை உயர்வு என்கிற காரணத்தைக் கூறி பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6.00ரூபாய் முதல் 8.00ரூபாய் வரை உயர்த்திய தனியார் நிறுவனங்கள் தற்போது பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15.00ரூபாய் வரை குறைத்து விட்ட பிறகும் நுகர்வோருக்கான விற்பனை விலையை சிறிதளவு கூட குறைக்கவில்லை. இதற்கு காரணம் பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதால் தான் இந்நிலைக்கான காரணமாக அமைந்துள்ளது. இதனை தமிழக அரசும் கண்டு கொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக நேற்று மாலை 3வது கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் பால் உற்பத்தியில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும் எனவும், 15ஆயிரம் கோடி ரூபாயில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு சிறிதும் பலனளிக்கப் போவதில்லை. மாறாக இந்திய பால்வளத்தை அழிக்கவே பயன்படும்.

ஏனெனில் சில வருடங்களாகவே மாட்டுத்தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணியால் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. அவர்கள் வைப்பது தான் கொள்முதல் விலை என்பதால் பாலுக்கு நிரந்தரமான கொள்முதல் விலை கிடைப்பதில்லை. அதே சமயம் நுகர்வோருக்கான விற்பனை விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டு வருகிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்நிலை மாறி பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதையும், நுகர்வோருக்கான விற்பனை விலை கட்டுக்குள் வைத்திருப்பதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்தால் மட்டுமே வருங்காலங்களில் பால் உற்பத்தி என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தங்குதடையின்றி தொடரும். இல்லையென்றால் பால் உற்பத்தியாளர்கள் தங்களது கறவை மாடுகளை இறைச்சிக்கு அனுப்பி விட்டு, மாற்றுத் தொழிலை நாடும் சூழல் தான் ஏற்படும்.

எனவே மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமான திட்டங்களை வகுக்காமல் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்த முனைவதே பால் உற்பத்தி மீதான உண்மை அக்கறையாக இருக்க முடியும்… என்று கோரியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img