
சென்னை:
குதிரை பேரம் நடந்ததால்தான் ரகசிய வாக்கெடுப்புக்குக் கோரிக்கை விடுத்தோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக இன்று காலை சட்டமன்றம் கூடியதும், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் சரவணன் எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் பற்றி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து அமளி ஏற்பட்டது.
ஆனால் இதற்கு, சபாநாயகர் தனபால் பேச மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை அடுத்து, தலைமைச் செயலகம் எதிரே உள்ள காமராஜர் சாலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் சாலை மறியல், மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜாஜி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.
ராஜாஜி சாலையில் திமுகவினரோடு சாலைமறியலில் ஈடுபட்டதால் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏக்களும் கைதுசெய்யப்பட்டனர்.
MLA-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்தும் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும், கவிழ்க்கப்பட வேண்டும். அதிமுக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம் என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
முன்னதாக, சட்டப் பேரவையில் வில்லிவாக்கம் ரயில்வே பாலம் குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வில்லிவாக்கம் பாலம் குறித்து 2015-ம் ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதாகவும், ரூ.7.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் பாலம் கட்டாதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.



