
மத்திய அரசு, பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்குக் கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மறுதலிக்கும் விதமாக,தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது குறித்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசு, பொதுப்பிரிவில், ஏழைகளுக்கு அதாவது இட ஒதுக்கீட்டின் பலனை இதுவரை அனுபவித்திராத பொருளாதாரத்தில் நலிந்தோருக்காக, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது.
அதை, பல மாநிலங்கள் அமல்படுத்தின தமிழகத்தில், இதுவரை அமலாக்கவில்லை. தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சலுகைகளை கொடுக்காமல் தாமதித்து வருகிறது. பல முறை இந்து மக்கள் கட்சி சார்பிலும் பொதுப் பிரிவைச் சார்ந்த பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில், கோரிக்கை மனு அனுப்பினோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏழைகள் சமூகம் மிகவும் சிரமப்படும் வேளையில், எதற்காக இப்படி செய்கின்றனர் என்று தெரியவில்லை. தற்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள, அரசியல் சட்ட திருத்தப்படி, பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான, ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தராமல், தமிழக அரசு தாமதித்து வருகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்படும், வருமான சான்றிதழை, எந்த தாசில்தாரும் கொடுக்க வேண்டாம் என, இரு தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது, ஏழைகளையும் பொது பிரிவினரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக, உள்நோக்கத்துடன் செய்ததாக அனைவரும் கருதுகிறார்கள்.
பொதுப்பிரிவினர் சார்ந்த சமூக வழக்கறிஞர்கள், தயவு செய்து உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எதிராக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்கள் கட்சியின் சார்பிலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான சான்றிதழ்கள் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் அறப் போராட்டங்கள் நடைபெறும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து தமிழகத்தில் பொதுப்பிரிவினர் ஏழை எளியோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.
மத்திய அரசு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிவித்த பின்பு பல மாநில அரசுகளும், மத்திய அரசும் இதை வெற்றிகரமாக இதனை செயல்படுத்தி வந்த போதும் தமிழகத்தில் மட்டும் இதை செயல்படுத்தாமல் தாமதிப்பது சரியானதல்ல.
எனவே உடனடியாக ஏழைகளுக்கான வருமான சான்றிதழ்களை வழங்க வேண்டாம் என்கின்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம்… என்று தெரிவித்துள்ளார்.