
சென்னை:
அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்குமாறு, பால்முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் மீது “உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட கடித நகல்…
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” எனவும், “தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது” எனவும் குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு அத்தியாவசிய உணவாக விளங்கும் பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மாலின் உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும், புற்றுநோயை உருவாக்கும் வேதிப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாகவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தினார்.
அதுமட்டுமன்றி “தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் இல்லை என்று நிருபித்தால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்” என ஊடகங்களில் அதிரடியாக பேசியதோடு, புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு தமிழகத்தில் இருந்து சோதனைக்காக அனுப்பப்பட்ட பால் மாதிரிகள் அந்த ஆய்வகத்தின் அதிகாரிகளால் வாங்க மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், தனியார் பால் நிறுவனங்களின் அதிகாரிகள் எங்களுக்கு முன்னால் சென்று பால் மாதிரிகளை சோதனை செய்யவிடாமல் தடுப்பதாகவும், அதற்கு மத்திய அரசு அதிகாரிகளும் துணை போவதாகவும் அரசு அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தி மக்கள் மத்தியில் மேலும் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கினார்.
மேலும் பால் கலப்படம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்தும், தனியார் பால் நிறுவனங்கள் மீது கலப்படம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜுன் -19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த 19.06.2017அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கடந்த 05.08.2011முதல் 31.05.2017வரை தமிழகம் முழுவதும் சுமார் 886பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187பால் மாதிரிகள் மட்டும் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், “எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிருபணமாகவில்லை” எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் “தமிழக பால்வளத்துறை சார்பில் புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு மே-31ம் தேதி சோதனைக்காக அனுப்பப்பட்ட பால் மாதிரிகளில் உயிருக்கு தீங்கிழைக்கும் எந்த ஒரு ரசாயனப் பொருட்களும் கலப்படம் செய்யப்படவில்லை” எனவும், அதன் முடிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று (“டைம்ஸ் ஆப் இந்தியா”) கடந்த 23.06.2017அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவிலும், புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படியும் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது ஏதோ உள்நோக்கம் கொண்டது என்பதும் தெள்ளத்தெளிவாக உறுதியாகியுள்ளது.
மக்கள் நலன் மீது அக்கறையோடு செயல்பட்டு, மக்களுக்கு தரமான பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறி தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் மட்டுமே ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி பொதுமக்கள் பால் அருந்துவதையே தவிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, அனைத்து பால் நிறுவனங்களையும், பால் முகவர்களையும் பொதுமக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையை உருவாக்கி, பொதுமக்கள், பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கும் தள்ளி விட்டுள்ளார்.
எனவே பொறுப்பின்றி செயல்பட்ட திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்வதோடு மட்டுமின்றி, பொதுமக்கள் நலன் சார்ந்து கலப்படப் பாலினை தடுக்க அனைத்து பால் நிறுவனங்களையும் ரகசியமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” என ஒட்டுமொத்தமாக பொதுவெளியிலும், ஊடகங்களிலும் பேசியதில் “ஏதோ உள்நோக்கம் கொண்டதாக தெரிவதால்” அவர் அவ்வாறு பேசியதற்கான காரணத்தை அறிய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவிட வேண்டும் என “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.



