
லடாக்கில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூரை சேர்ந்த பழனி என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் தற்போது ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கஜினி நகரில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். பழனி லடாக்கில் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆக பணியாற்றி வருகின்றார். இன்று அதிகாலையில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில், சீன ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதில் பழனியும் ஒருவராவார். இந்தத் தகவல் இந்திய ராணுவத்தில் ராஜஸ்தானில் பணிபுரியும் அவரது தம்பி இதயக்கனியிடம் லடாக்கில் உள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதயக்கனி தனது அண்ணன் இறந்த தகவலை அவர்களது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் அவரது குடும்பத்திற்கு தெரிந்தவுடன் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். ஒரே குடும்பத்தில் இருந்து இந்திய நாட்டை காப்பதற்காக ராணுவத்தில் சேர்ந்தவர் தற்போது உயிரிழந்தது அவருடைய குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தையும் மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பழனியின் வருவாயை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தனது டிவிட்டர் பதிவிலும் இரங்கல் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த பழனியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஓரிரு தினங்களில் சொந்த ஊர் வந்து அடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
- ரவிச்சந்திரன், மதுரை