
லடாக் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் சீன ராணுவத்தினரின் அநியாயமான அத்துமீறல் தாக்குதலால் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல், அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் இந்திய – சீன எல்லையில் சீன ராணுவத்தினர் திடீரென இந்திய வீரர்கள் தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்து கைகலப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்திய வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்று இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்ற ஹவில்தாரும் ஒருவர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பழனியின் உடல், ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. பழனியின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் எடுத்துச் செல்லப்பட்டது. கிராம எல்லையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில், அவரது உடல் ராணுவ வாகனத்தில் மாற்றப்பட்டு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

தேசியக் கொடி போர்த்தப் பட்ட பழனியின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- ரவிச்சந்திரன், மதுரை