- புகாரை வாங்காமலேயே கட்டப்பஞ்சாயத்து!
- சாத்தான்குளம் சர்ச்சை விலகும் முன்பே…
- பூகம்பம் கிளப்பும் வேடசந்தூர் டிஎஸ்பி.,!
வர்த்தகர்கள் இருவர் போலீஸின் விசாரணைக்குப் பின் உயிரிழந்த நிலையில், உலக மீடியாக்களுக்கே எடுத்துச் செல்லப்பட்டது சாத்தான்குளம் சம்பவம். அதனால் காவல்துறையில் ஏற்பட்ட அதிரடிகள் பல.
இந்தச் சம்பவத்தின் சோகச் சுவடுகளால் போலீஸார் மீது மக்கள் மனத்தில் இருக்கும் கோபத்தையும் மோசமான கருத்தோட்டத்தையும் நீக்குவதற்காக போலீசார் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோகம் நீங்குவதற்குள், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் டிஎஸ்பி ஒருவர் அதிகார தோரணையில் இதே போன்ற அடாவடியுடன் களத்தில் இறங்கியிருப்பது மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, குஜிலியம்பாறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, டி.கூடலூர் பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் நடத்தி வருபவர் சரவணன் (வயது 35). இவர் கரூர் மாவட்டம், கத்தாளப்பட்டி பகுதியைச் சார்ந்தவர்.
இந்நிலையில் டி.கூடலூர் பகுதியில் உள்ள அவரது தனியார் ஸ்பின்னிங் மில்லில் கொரோனாவிற்கு முன்பே கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அதே மில்லில் பணியாற்றிய பாலகிருஷ்ணன் என்கின்ற பிட்டர், சுமார் 12 லட்சம் மதிப்பிலான TFO டபுளிங் மிஸின் என்கின்ற பஞ்சை நெய்து நூலாக்கி தரும் மிஷின், மற்றும் ஸ்பேர்பார்ட்ஸ் என்று சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்களை ரிப்பேர் செய்து தருவதாகக் கூறி, எடுத்துச் சென்று ஏமாற்றி வேறு ஒருவரிடம் விற்றுவிட்டதாக புகார் கூறப் படுகிறது.
ஏற்கெனவே சிறு குறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மாநில அரசின் மானியத்துடன் பெற்ற இந்த இயந்திரத்தினை மீட்டுத்தருமாறு, கடந்த 27 ஆம் தேதி காவல்துறையின் ஆன்லைனில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி, சரவணனுக்குச் சொந்தமான தனியார் ஸ்பின்னிங் மில்லில் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நூல் ஸ்பின்னிங் மில் நிறுவனத்தைச் சார்ந்த அபிஷேக் சங்கர் என்பவர் 10 பேருடன் அத்துமீறி உள்ளே நுழைந்து, மிஷின் ஆப்பரேட்டர் கணேசன் என்பவரை தாக்கி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சரவணன் எங்கே எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதை அடுத்து தகவல் அறிந்து தன் நிறுவனத்திற்கு ஓடி வந்த சரவணன், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஊழியர் கணேசனுக்கு, டி.கூடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து விட்டு மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, அந்த கும்பல் கோன்பை என்கிற நூல் மெட்டீரியல், வெயிட் மிஷின், ஸ்கேல் என ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை அங்கிருந்து எடுத்துச் சென்றதாக காவல்துறையின் ஆன்லைனில் மீண்டும் புகார் செய்துள்ளார் சரவணன்.
இந்நிலையில். குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் மீண்டும் புகார் செய்த சரவணன், ஜூலை 9 வியாழன் அன்று காலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பவுல்ராஜ் என்பவர் வரச்சொன்னதன் பேரில் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது உதவி ஆய்வாளர் பவுல்ராஜ், டிஎஸ்பி இளவரசன் உங்களை பார்க்கணும்னு சொன்னார் என்று கூறியுள்ளார். இதை அடுத்து வேடசந்தூர் டிஎஸ்பி அலுவலகத்துக்குச் சென்ற சரவணனிடம், புகார் கொடுத்ததை உடனே வாபஸ் வாங்கு, நான் டிஎஸ்பி ஆக இருக்கும் வரை நீ என் ஏரியாவில் தொழில் செய்ய முடியாது உனக்கு பயம் இல்லை துளிர்விட்டு போச்சா என்று டிஎஸ்பி., மிரட்டினாராம்.
அதற்கு சரவணன், சார் நீங்களே இப்படி சொன்னீங்கன்னா நான் எப்படி வாழ்வது? குடும்பத்துடன் தற்கொலைதான் செய்துக்கணும்! என்று விரக்தியில் கூறினாராம். அதற்கு டிஎஸ்பி., தன்னிடம் செத்து தொலை என்று கூறியதாக சரவணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த விவகாரம் இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.