சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் இல்ல கட்டுபாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த ஆசாமி ஒருவர் முதலவர் இல்லத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் அதை கண்டுபிடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறை அழைப்பு வந்த எண்ணை ட்ரேஸ் செய்த போது அது சேலையூரை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவரது மனைவியின் எண் என தெரிய வந்துள்ளது.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக 100 என்ற எண்ணிற்கு அழைப்பு வந்தது. இதனால் முதலமைச்சர் எடப்பாடி வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் ஒன்றும் கிடைவில்லை என்பதும் இது புரளி என தெரியவந்தது.
இதன் பின்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார் அது சேலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் (33) என கண்டறிந்தனர். அவரை காவல்நிலையம் அழைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்த்தினர். ஆரம்பத்தில் மறுத்த வினோத் கண்ணன் பின்பு தான் தான் மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
வீட்டில் மனைவி சாப்பாடு போடவில்லை எனவும் இதனால் வந்த தகராறில் அவரை பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன் எனவும் கூறியுள்ளார்.
வினோத் கண்ணன் இப்படி செய்வது இது முதல்முறையல்ல. கடந்த 2019ம் ஆண்டும் இதே போல் முதலமைச்சர் வீடு மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.