சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுபதி கமிஷன் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு தொடர்ந்து தன்னிடம் விசாரணை நடத்த தடை உத்தரவு பெற்றார். இந்நிலையில் நீதிபதி ரகுபதி கமிஷன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு நீதிபதி ரகுபதி கமிஷன் அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Popular Categories



