“நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!..”..பெரியவா (என்னுடைய சென்னை மாற்றல்
உத்தரவின் ஒரு பிரதி
எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?–ஹூப்ளி
ராமசாமி.)
சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1985…காஞ்சிபுரம் ஸ்ரீமடம். நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தேன்.
“யாரு?…ஹூப்ளி ராமசாமியா?..எங்கேருந்து வரே?.. மதராஸ்லேருந்து
தானே?”—பெரியவா “விஜயவாடாவிலிருந்து வரேன். இப்போ அங்கேதான் வேலை..” –நான்.
“இல்லையே..மதராஸிலிருந்து தானே?”—பெரியவா. நான் முதலில் கூறியது,
பெரியவாளின் திருச்செவிகளில் சரியாக விழவில்லை போலும் என்று எண்ணிக்கொண்டு,
சற்று உரத்த குரலில்,”விஜயவாடாவிலிருந்து..மதராஸ் வழியாத்தானே வரணும்…”
என்றேன் நான்.
பெரியவா, “இல்லே…நீ மதராஸிலிருந்து தான் வந்திருக்கே.”
பின்னரும் பெரியவாளிடம் வாதாட விரும்பாமல் பிரசாதம்
பெற்றுக்கொண்டு சென்னைக்கு வந்தேன். அங்கே கொஞ்சம் சொந்த வேலை இருந்தது.
செகந்தராபாத்திலுள்ள என்
மேலதிகாரிக்கு போன் செய்து ஒரு வார லீவு கேட்டேன். அவர் சொன்னார்;
” Ramaswami! Here is a Bombshell..you are transferred to Madras..”
“சார், நான் மெட்ராஸுக்கு மாற்றல் கேட்கவில்லை. செகந்தராபாத்துக்குத் தான்
கேட்டிருந்தேன்…” “Sorry, You are to be relieved tomorrow. Go to
Vijayawada immediately and get relieved tomorrow.”
அப்படியே செய்தேன்.
என்னுடைய சென்னை மாற்றல் உத்தரவின் ஒரு பிரதி
எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?
‘இல்லே..நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!..’ என்று பெரியவா சொன்ன அந்த
நிமிடத்தில், நான் சென்னை அதிகாரியாகத் தான் இருந்திருக்கேன்.
நாம் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். கவலையே படாமல்,எல்லா சுமைகளையும்
பெரியவாளிடம் transfer செய்து விடுவது தான்.




