மதுரை: நியூட்ரினோ திட்டம் என்ற பெயரில் அணுக்கழிவுகளைக் கொட்ட மறைமுக இடமாக இது திகழ்கிறது என்றார் வைகோ. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வைகோவுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நியூட்ரினோ திட்டம் என்ற பெயரில் அணுக் கழிவுகளை கொட்ட மறைமுகமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்த உள்ளார்கள். அந்த தண்ணீர் வெளியேறும்போது விஷத்தன்மையுடன் இருக்கும். இதனால், எந்தப் பயிரும் விளையாது. கட்டடங்கள் இடியும். பயிர் நிலங்கள் பாழாகும். இப்படிப்பட்ட பேராபத்தை தமிழகம் ஏன் சுமக்க வேண்டும்? இப்படிப்பட்ட விபரீத ஆராய்ச்சிக்கு தமிழகம் பலியாடு ஆக முடியாது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை ஆகியவற்றிற்கு ஆபத்து ஏற்படும். இதுகுறித்து கேரள முதலமைச்சரிடம் நேரில் பேசியிருக்கிறேன். தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விளைநிலங்களை தரிசாக்கும் நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார் வைகோ.
Popular Categories



