இரண்டாயிரம் ரூபாய்க்காக தாயை அடித்து கொன்று புதைத்த மகன்கள்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
murder-2-1

ஈரோட்டில், தாயை அடித்து கொலை செய்து, மயானத்தில் புதைத்த இரு மகன்களை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு, சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்த கணேசன் மனைவி சரோஜா, 48: கூலி தொழிலாளி. இவர் கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

சரோஜாவுக்கு, விக்னேஷ், 27, அருண்குமார், 23, என, இரு மகன்கள் உள்ளனர். விக்னேஷ் வேன் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் உள்ளனர். வீட்டில் வைத்திருந்த, 2,000 ரூபாயை அவர் தாய் சரோஜா, கேட்காமல் எடுத்து செலவு செய்து விட்டார்.

இதனால் விக்னேஷ், அருண்குமார் இருவரும் நேற்று நள்ளிரவு, 2:00 மணியளவில் மதுபோதையில், சரோஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து, சரோஜாவை இரும்பு கம்பியால் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில், சரோஜா வலி தாங்க முடியாமல், அலறியுள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். அண்ணன், தம்பி இருவரும் தனியார் ஆம்புலன்சில், தாயை ஏற்றி சென்றனர். பின், சரோஜா குறித்த விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், சூரம்பட்டி போலீசில் புகாரளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சரோஜா இறந்ததும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், மகன்கள் இருவரும் சூரம்பட்டி வலசு மயானத்தில் புதைத்தது தெரியவந்தது.

இதுபற்றி சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், தாசில்தார் பரிமளாதேவிக்கு தகவல் தெரிவித்ததார். பின்னர், தாசில்தார் முன்னிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட சரோஜாவின் உடலை வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.

அதில், சரோஜாவின் உடலில் முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அடித்து கொலை செய்ததற்கான காயங்கள் இருந்தது தெரியவந்தது. விக்னேஷ், அருண்குமார் இருவரையும், சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.