Home சற்றுமுன் அதிர்ச்சி! ஆண்டாள் கோயில் சொத்தை கபளீகரம் செய்யும் ரவுடிகள்! போலீஸ் உடந்தை?

அதிர்ச்சி! ஆண்டாள் கோயில் சொத்தை கபளீகரம் செய்யும் ரவுடிகள்! போலீஸ் உடந்தை?

இது ஏதோ சிலைக்கடத்தல்காரர்கள், திருடர்களுக்கு வசதி செய்து கொடுத்தது போல் ஆகிவிடாதா?! அதற்கு போலீசாரும் உடந்தையா?

somani-bhavan2
somani-bhavan2

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயாரின் திருக்கோவில் சொத்தை காக்க குரல் கொடுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து பகீர் குரல் கொடுத்திருக்கிறது விருதுநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத். அந்த அமைப்பின் சார்பில் நம்மிடம் பேசிய சரவண கார்த்திக் இது குறித்துக் குறிப்பிட்ட போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் சொத்து இப்போது ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் ரவுடிகளால் களவாடப் பட்டு கபளீகரம் செய்யப்படுகிறது, அதற்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வாழும் கலியுக தெய்வம் தாயார் ஆண்டாள் திருக்கோவிலில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. ஒன்று வடபத்ரசாயி பெருமாள் சந்நிதி. மற்றொன்று தாயார் ஆண்டாள் – ரங்கமன்னார் சந்நிதி. ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாள் சந்நிதிக்கு உரிய ராஜகோபுரம்தான் தமிழக அரசின் அதிகாரபூர்வ சின்னமாக உள்ளது.

இந்த சந்நிதி பெருமாள்தான் திவ்யதேச பெருமாள். இவரை தரிசனம் செய்ய இரண்டு வழி உள்ளன. ராஜகோபுரம் வழியாகச் செல்லலாம். அடுத்து ஆடிப்பூர கொட்டகை வழியாக வந்து தாயார் அவதரித்த நந்தவனத்தின் வழியாகவும் சென்று பெருமாளை தரிசிக்கலாம்.

இந்தக் கோவிலைச் சுற்றி சுற்றுச்சுவர் எனப்படும் கோட்டை மதில் சுவர் உள்ளது! இது பல நூற்றாண்டுகளுக்கு முன் மன்னர்களால் கட்டப்பட்டு திருக்கோவிலைப் பாதுகாக்க ஏற்படுத்தப் பட்டது. இது மட்டுமின்றி, தாயார் ஆண்டாள் திருக்கோவிலைச் சுற்றி பல மடங்கள் உள்ளன. இந்த மடங்களின் நோக்கம் அவற்றைத் தொடங்கியவர்களால் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு அதன்படி இன்றளவும் அவை செயல்பட்டு வருகின்றன.

ஆடிப்பூர கொட்டைகைக்குள் மூன்று மடங்களுக்கு இடங்கள் உள்ளன. திருக்குறுங்குடி ஜீயர் மடம், வானமாமலை மடம், அஹோபில மடம் ஆகிய மூன்று மடங்களுக்கு இங்கே இடங்கள் உள்ளன. இதில் வானமாமலை மடத்துக்கு தாயார் சந்நிதி தெருவில் இன்னொரு‌ மடமும் உண்டு.

somani-bhavan1
somani-bhavan1

வானமாமலை மடத்தின் இந்த இடத்தை வெளி மாநில பக்தர்கள் வந்து தங்கி குளித்து விட்டு பெருமாள்- தாயாரை சேவித்து விட்டுச் செல்வதற்காக மிக மிகக் குறைந்த கட்டணம் பெற்று பக்தர்களுக்கான சேவை செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டது.

இதை அறிந்து மஹாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த சோமானி என்கிற குடும்பப் பெயர் கொண்ட மூன்று பேர், ஜீயர் ஸ்வாமிகளிடம் வந்து, தாங்கள் இந்த இடத்தைப் பராமரித்து, மடத்தின் நோக்கம் நிறைவேற உதவுவதாகக் கூறி, தங்களிடம் இந்த இடத்தை ஒப்படைக்கும் படி கோர, அப்போதைய ஜீயர்‌ ஸ்வாமிகளுடம் அப்படியே செய்தார். ஆனால் இது போன்ற ஒப்பந்தங்கள் செல்லாது என்கிறது, ஹிந்து சமய அறநிலையத்துறைச் சட்டம்!

இருப்பினும், இந்த ஒப்பந்தப் பத்திரத்தில் தெளிவாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளனர். இந்த இடம், வெளி மாவட்ட, மாநிலங்களிலிருந்து வந்து தங்கி, குளித்து தாயாரையும், பெருமாளையும் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு மட்டுமே உபயோகப்பட வேண்டும் என்றும், அதைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெளிவுபடுத்துகிறது!

இந்த நிலையில், இந்த மடத்தின் நிர்வாகத்தைப் பெற்றுக் கொண்ட சோமானி குடும்பம், மடத்தை நிர்வகிக்க பீகாரிலிருந்து ஒருவரை அழைத்து வந்து, பொறுப்பில் அமர்த்தியது. அவரும் மடத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நிர்வகித்து வந்துள்ளார்.

அந்த நேரம், சோமானி குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசுகளிடம் தொடர்பு கொண்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த சிங்கராஜா என்பவர் தரப்பு, இவ்வளவு குறைந்த அளவிலா கட்டணம் வைப்பது, இது போன்ற இடம் இருந்தால் எவ்வளவு மதிப்பு தெரியுமா என்று கூறி, சேவைக்காக நிர்வகிக்கப் பட்டு வந்த இடத்தை வணிக ரீதியாக மாற்றுகிறது. இந்த வணிக ரீதியிலான செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், இதனை நிர்வகித்து வந்த பீகாரைச் சேர்ந்தவரை வெளியேற்றி விட, இதன் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்ட சிங்கராஜா தரப்பு பல்வேறு அடாவடிகளில் ஈடுபட்டது.

இதன் பின்பு தான் அந்த சோமானி பவன் மர்ம கூடாரமாக மாறியதாகவும், அங்கு சட்ட விரோதமாக பல விஷயங்கள் நடப்பதாகவும் விவரமறிந்த அங்குள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்! மேலும் இது தொடர்பாக யாராவது கேட்டால் அந்த சோமானி பவனை நிர்வாகம் செய்யும் நபர் உள்ளூர் ரவுடிகளை வைத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதும், அடிக்கப் பாய்வதுமாக இருந்ததால் யாரும் இது குறித்து வெளியில் சொல்லவே அச்சப்பட்டுள்ளனர்.

srivilliputhur-vhp-protest
srivilliputhur-vhp-protest

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருக்கோவிலுக்குச் சொந்தமான கோட்டைச்சுவரின் முன்பக்க சுவர் தனக்கு சொந்தம் எனக் கூறி சில சமூக விரோதிகளை கையில் வைத்துக் கொண்டு செவ்வாய்க் கிழமை (18/08/2020) காலை இடிக்க ஆரம்பித்துள்ளனர்.

திருக்கோவில் ஊழியர்கள்‌ தடுத்தும் அவர்களை சமூக விரோதிகளை வைத்துக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இந்த நிவையில் விசுவ ஹிந்து பரிஷத் கவனத்துக்கு இந்த பிரச்னை கொண்டு வரப்பட்டது. இதை அடுத்து நாம் களத்தில் இறங்கினோம். உடன் பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் திருக்கோவிலின் இதர கடைக்காரர்களும் சேர்ந்து, சுவர் இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினோம். அதன்‌ பிறகே காவல்துறையினர் வந்து இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்து பேசினர்.

ஆனால் மீண்டும் 3 நாட்கள் கழித்து 21/08/2020 வெள்ளிக்கிழமை அன்று சோமானி பவனில் வேலை செய்யும் சிங்கராஜ் என்பவர் சமூக விரோதிகளுடன் சேர்ந்து மீண்டும் இடிக்கத் தொடங்கினார். மீண்டும் சென்று தடுத்ததும், அப்போதைக்கு சுவர் இடிப்பது தடுத்து நிறுத்தப் பட்டது.

இவ்வளவு பிரச்னைகளையும் மீறி மீண்டும் ஆக. 24 அன்று காலை அந்த சமூக விரோதிகள், கோட்டைச் சுவரை இடித்து தரை மட்டமாக்கும் வேலையில் ஈடுபட்டனர்! அப்போது திருக்கோவில் செயல் அலுவலரும், ஊழியர்களும் திருக்கோவிலின்‌ உள்ளிருக்கும் புறக்காவல் நிலையத்தை அணுகி அங்கிருக்கும் காவலர்களிடம் தடுத்து நிறுத்த கேட்ட போது அவர்கள் மறுத்ததுடன், காவல் ஆய்வாளர் சொன்னால்தான் கேட்போம் என்று கூறிவிட்டனர்!

அதன் பிறகு, மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் சமூக விரோதிகளை அங்கிருந்து அகற்றி தற்போது அந்த இடத்துக்கு மட்டும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது! காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையால், திருக்கோவிலின் பாதுகாப்புக்காகவே தொடங்கப்பட்ட புறக்காவல் நிலையம் கோவிலை காக்காமல் சமூக விரோதிகளைக் காத்த மர்மம்‌ என்ன?! என்று கேள்வி எழுப்புகின்றனர் உள்ளூர்வாசிகள்.

அந்தச் சுவர் பெருமாள் கோவிலின் கோட்டை மதில் சுவர்! இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது! அது மட்டுமல்ல இந்த சுவரின் மேற்கு பகுதியில் தாயார் பிறந்த நந்தவனம் உள்ளது! இந்த சுவரின் வடக்கு பகுதியின் ஒரு பக்கம் பெருமாளுக்கு தளிகை செய்யும் இடம்! இன்னொரு பகுதி ஐகான் (I CON) எனப்படும் விருதுநகர்‌ மாவட்டத்திலுள்ள சிறிய திருக்கோவில்களின் உத்ஸவ மூர்த்தி விக்ரஹங்கள் பாதுகாப்பாக‌ வைக்கப் பட்டுள்ள இடம்.

இடிக்கப்பட்ட சுவர் இந்த சமூக விரோதிகள் சொல்வது போல், அவர்களுக்கு சொந்தமானது என வைத்துக் கொண்டால், பெருமாளுக்கு தளிகை செய்யும் இடம், உத்ஸவ மூர்த்திகளின் விக்ரகங்கள் பாதுகாக்கப்படும் இடம் அனைத்தும் பாதுகாப்பற்றுப் போய் விடுமே! இது ஏதோ சிலைக்கடத்தல்காரர்கள், திருடர்களுக்கு வசதி செய்து கொடுத்தது போல் ஆகிவிடாதா?! அதற்கு போலீசாரும் உடந்தையா?

எனவே நாம்தான் தாயார் ஆண்டாளின்‌‌ திருக்கோவில் சொத்தை பாதுகாக்க முன் வர வேண்டும். அதை மனத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் 2ஆம் தேதி அன்று காலை 11 மணி அளவில் இந்த சமூக விரோதிகளை கைது செய்யவும், சோமானி பவனை அறநிலையத்துறை கையகப் படுத்தவும், புறக்காவல் நிலையத்தை ஆடிப்பூர கொட்டகைக்கு வெளியே கொண்டுவர வலியுறுத்தியும் விஸ்வ ஹிந்து பரிஷத் – விருதுநகர் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்கு ஆத்திக அன்பர்கள் அனைவரும் வரவேண்டும், தாயாரின்‌ சொத்துக்களை பாதுகாக்க, சமூக விரோதிகளை களையெடுக்க நம் பங்கை ஆற்ற வேண்டும்… என்றார் சரவண கார்த்திக்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »