
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விகாஷ் மீனா(31). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் 2014ம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது மனைவி ஹேமலதாவுடன் கீழ்ப்பாக்கம் பராக்கா சாலையில் உள்ள வருமான வரித்துறை குடியிருப்பில் வசித்து வந்தார். திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே கொரோனா காரணமாக தனது மனைவி ஹேமலதாவை கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு, விகாஷ் மீனா தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அதேநேரம், தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவரது வீட்டை வழக்கமாக கணேஷ் என்பவர் சுத்தம் செய்து வந்தார். அதன்படி கணேஷ் நேற்று காலை 10.30 மணிக்கு விகாஷ் மீனா வீட்டிற்கு வந்துள்ளார்.
வெகுநேரம் வீட்டின் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தலைமை செயலகம் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி உதவி ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விகாஷ் மீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப்பையும் கைப்பற்றினர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம், விகாஷ் மீனா வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் என்பதால், அவர் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வழக்குகளின் விசாரணை அதிகாரியாக இருந்தார்.
இவர் தற்கொலை செய்யவில்லை. அறையில் விழுந்து கிடந்தார். அதேநேரம் அவரது வாய் மற்றும் கண் புருவத்தில் ரத்த காயங்கள் உள்ளது.
மேலும், அவரது முகத்தை யாரே மின்வயரால் இறுக்கியது போன்ற தடயம் உள்ளது. இதனால் விகாஷ் மீனாவை யாரோ கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இளம் வயது புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் என்பதால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்று அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா அல்லது தற்கொலையா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.