சென்னை:
100 நாட்களுக்குள் தேர்தல் நடைபெற்றால் அதில் தாம் போட்டியிடத் தயார் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்காக, தான் முதல்வராக விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா டுடே டிவியில் செய்தியாளர் பிரியங்காவுடனான பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறிய கமல், தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது, இது கட்டாயக் கல்யாணம் போல் இருப்பதாகக் கூறினார். தமிழக மக்கள் இந்தக் கட்டாயக் கல்யாணத்தை விட்டு வெளியேற விரும்புகின்றனர் என்றார்.
தாம் நடிகர் ரஜினிகாந்த்தை சில வாரங்களுக்கு முன்பு சந்தித்து, தமது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசித்ததாகக் கூறினார். இருவருக்கும் ஊழலை எதிர்ப்பது என்ற பொது நோக்கம் இருந்தாலும் பாதை மட்டும் வேறு வேறு என்று கூறிய கமல், தமக்கு ரஜினியுடன் எந்த முரண்பாடும் இல்லை என்ரார். அவரைக் கட்டியணைத்து தமது அரசியல் முடிவைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த மற்றொரு பேட்டியில் தமிழக மக்களுக்காக தாம் முதல் அமைச்சர் ஆக விரும்புவதாகவும் தமது அரசியல் பிரவேசம் உறுதி என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
முன்னதாக, கமல்ஹாசன் கேரள முதல்வர் பிணரயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்மைக் காலங்களில் கேரளாவுக்குச் சென்று பிணரயி விஜயனை சந்தித்தார். அதனால் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதை மறுத்தார் கமல். தாம் ஆலோசனை கேட்டதாக மட்டுமே கூறினார்.
பின்னர் நேற்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பேசினார். கேஜ்ரிவால் சென்னைக்கு கமல் இல்லத்துக்கே வந்து தமது கட்சியில் சேருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதையும் அவர் மறுத்துள்ளார். தனிக்கட்சி என்ற முடிவில் இருப்பதாகக் கூறியுள்ளார் கமல்.

முன்னதாக, நேற்றைய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினர் கமலும் கேஜ்ரிவாலும்! நடிகர் கமல் அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்புவிடுத்த கேஜ்ரிவால், ஊழல், மதவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றி இருவரும் ஆலோசித்ததாகத் தெரிவித்தார்.
அரவிந்த் கேஜ்ரிவாலை விமான நிலையத்தில் கமலின் மகள் அக்ஷரா ஹாசன் நேரில் சென்று வரவேற்று, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே கேஜ்ரிவாலுக்கு நடிகர் கமல் மதிய விருந்து அளித்தார். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தில்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் தன்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதே பாக்கியம் என கமல் குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிரான யாரும் தமக்கு உறவினர்கள் ஆகிவிடுவதாகவும், ஊழலுக்கு எதிரானவர் என்ற வகையில் கேஜ்ரிவாலுடன் தனது உறவு தொடர்வதாகவும் கூறினார்.



