ராஜபாளையம்… 3வது நாளாக மறியல் போராட்டம்; போலீஸ் குவிப்பு!

சற்றுமுன் மதுரை
rajapalayam-public-protest1
rajapalayam-public-protest1

ராஜபாளையம் பகுதிகளில் மூன்றாவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. பதற்றம் நீடிப்பதால் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சியின், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராஜாலிங்கத்தின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளை கைது செய்த பின்பு தான், இறந்த ராஜாலிங்கத்தின் உடலை பெற்றுச் செல்வோம் என்று கூறி முதுகுடி ஊர் மக்கள், புதிய தமிழகம் கட்சியினர் கடந்த இரண்டு நாட்களாக, ராஜபாளையம் – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

rajapalayam-public-protest
rajapalayam-public-protest

நேற்று முதுகுடியைச் சேர்ந்த பாலமுருகன், சந்திரசேகரன், முத்துச்செல்வம், ராஜன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆனாலும் இதனை ஏற்க மறுத்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று காலையும் மறியல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று ராஜபாளையத்தின் முக்கிய பகுதிகளில் சாலை மறியல் நடக்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் ராஜபாளையத்தின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.