
பாஜக சார்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாஜகவின் வேல்யாத்திரைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொது நல மனுக்கள் குறித்த வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் இருப்பதால் வேல் யாத்திரை உள்ளிட்ட பேரணிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசின் வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நாளை முதல் வேல் யாத்திரை மேற்கொள்ள இருந்த நிலையில் அனுமதி அளிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது..கொரோனா 2ஆவது மற்றும் 3ஆவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதை அடுத்து, இரு பொதுநல மனுக்களையும் தள்ளுபடி செய்தனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
தமிழக பாஜக., அரசின் முடிவு குறித்து மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிகிறது. இன்று மாலைக்குள் அரசின் முடிவு குறித்த அறிவிப்பு தமிழக பாஜக., தலைமை அலுவலகத்துக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேல் யாத்திரை என்ற பெயரில் மத்திய பாஜக., அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பிய தமிழக பாஜக.,வின் செயலுக்கு மாநில அதிமுக., அரசு தடை போட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.