திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு திருக்கோயில் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக துணைத் தலைவர் வி.சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணா, ஆர்.ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, அரசு உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு பூரி ஜெகன்நாதர் திருவிழா நடத்தியது போல அண்ணாமலையார் கோயில் விழாக்களையும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதே நேரம், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று, கோயில் நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.
அண்ணாமலையார் கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை கவனத்தில் கொண்டு தேர்த் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்காமல் உத்ஸவரை வைத்து கோயிலுக்குள் மட்டுமே விழாவை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கார்த்திகை தீபத் திருவிழாவை எப்படி நடத்துவது என, கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் கூட்டம் நடத்தப்படுகிறது என்றும், அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதை அடுத்து தீபத் திருவிழா மற்றும் தேர்த் திருவிழா குறித்து கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்க கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.