
ஐபேக் நிறுவனத்தின் மீது திமுக., தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்கும் நிலையில் பல கோடி ரூபாய் கொடுத்து பணிக்கு அமர்த்தப்பட்ட ஐபேக் குழுவினரால் பெரிய அளவில் சாதகமான சூழல் ஏற்படவில்லை என்று திமுகவினர் கருதுகின்றனர்
வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தேர்தல் ஸ்ட்ராடஜி உத்திகளை வகுத்துக் கொடுக்கும் ஐ-பேக் நிறுவனத்துடன் இந்த முறை திமுக., ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ரூபாய் 370 கோடி இதற்காக திமுக ஐபேக் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது .
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒரு நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி அதற்கு இத்தனை கோடி ரூபாய் கொடுத்து உள்ளார்கள் என்றால், தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் எத்தனை கோடிகள் திமுகவினர் அரசுப் பணத்தையும் மக்கள் பணத்தையும் கொள்ளை அடிப்பார்கள் என்று மக்கள் மத்தியில் அப்போதே பேச்சு பரவலாக எழுந்தது!
ஐபேக் நிறுவனம் தமிழகத்திற்கு புதியது! தமிழக அரசியல் சூழலுக்கும் புதியது! வட இந்தியாவில் பீகார், தில்லி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்த ஐபேக் நிறுவனம் தமிழகத்தில் சூழ்நிலை தெரியாமல் திண்டாடுவதாகவே திமுகவினர் குறை கூறுகின்றனர்!
அதற்கேற்ப ஐபேக் நிறுவனம் சென்னை மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் அலுவலகத்தைத் திறந்து பலரை பணிக்கு அமர்த்தியது. இந்தக் குழுவினர் தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் பலரையும் தொடர்பு கொண்டு நாங்கள் ஸ்டாலினின் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம் என்று குறிப்பிட்டு திமுகவுக்காக கருத்து உருவாக்க பணியில் ஈடுபட்டனர். அப்போது பலரும் திமுக குறித்தும் ஸ்டாலின் குறித்தும் விமர்சனம் செய்து பதிலளித்தனர். தாங்கள் அவ்வாறு பதில் அளித்த அந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் பரவ விட்டு, கேலியும் கிண்டலும் செய்தனர் !
சமூக தளங்களில் மட்டுமல்லாது, இணையதளங்களில் எழுதுபவர்கள் இணைய தளங்களை நடத்துபவர்கள், செய்தித் தளங்களை நடத்தும் ஊடகத்தினர் என பலரையும் தொடர்பு கொண்டு, திமுகவுக்காக ஆதரவுச் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், அதற்கு மாதம்தோறும் கணிசமான பணம் தருவதாகவும் கூறி, கிராமப்புறங்களிலும் சிறு சிறு நகரங்களிலும் வசிக்கும் பத்திரிக்கையாளர்கள் பலரை வளைத்துப் பிடித்தனர்

அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் உதயநிதி ஆகியோரை வைத்து படப்பிடிப்பு நடத்தி மக்கள் மத்தியில் ஒரு பொது தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர். மு க ஸ்டாலின் தலைமுடி ஹேர்ஸ்டைல் மாற்றப்பட்டது அதனால்தான்! ஆனால் அது பெரிய அளவில் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது!
ஸ்டாலின் நானும் ஒரு விவசாயி தான் என்று பதிய வைப்பதற்காக வயல்களில் இறங்கி பச்சை துண்டு அணிந்து வயல் வேலை செய்வதுபோல் படங்களை எடுத்து வெளியிட்டனர். ஆனால் அவற்றை எல்லாம் கேலி செய்து அதிமுக அமைச்சர்கள் கருத்துகளை வெளியிட்டனர். வயலில் பயிர் நடுதலுக்கும் தலையில் மயிர் நடுதலுக்கும் என வார்த்தை ஜாலங்களைக் கொட்டித் தீர்த்து, திமுக.,வினரின் குமுறலை மேலும் கிளப்பினர்.
ஐபேக் குழுவினரால் நடத்தப்படும் இந்த நாடகங்களை எல்லாம் பார்த்து வெம்பி வெதும்பி திமுகவின் இயல்பான தொண்டர்கள் தலையில் அடித்துக் கொண்டனர். சென்னை முதல் கடைக்கோடி வரை கிளைக் கழகங்கள் கொண்டு இயங்கக் கூடிய, மாபெரும் வரலாறு கொண்ட கட்சி இது என்று குறிப்பிடும் திமுக., இரண்டாம் மட்டத் தலைவர்கள், தனது வெற்றிக்காக தனியார் நிறுவனத்தின் உதவியை நாடியது குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டனர். இருப்பினும், அவ்வப்போது கூட்டம் போட்டு, இணைய வெளிக் கலந்துரையாடலில் தி.மு.க தலைமை அவர்களை சமாதானம் செய்தது. இதை அடுத்து கட்சி நிர்வாகிகள் தங்களை சமரசம் செய்து கொண்டு ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கினர்.

ஐ-பேக் நிறுவன ஊழியர்கள், கட்சி நிர்வாகிகளிடம் வெறும் பிரச்சாரம் மட்டும் போதாது, மக்களை கவரக் கூடிய இன்னும் பல நிகழ்ச்சிகளை நடத்துங்கள் என்று வற்புறுத்துகின்றனராம். மேலும், பொது மக்களைப் பார்த்து கை அசைக்க வேண்டும், பொது மக்களிடம் நல்ல பெயர் எடுக்க ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும் போன்ற சின்ன சின்ன ஐடியாக்களைச்சொல்லி அவற்றை திரும்பத் திரும்ப செய்யுமாறு வற்புறுத்துகின்றனராம். இதனால் மாவட்ட செயலாளர்கள் ஐபேக் நிறுவன செயல்பாடுகள் குறித்து, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தனியார் நிறுவனத்தின் யோசனைகள் தி.மு.கவின் நற்பெயரைக் குலைப்பதாக புகார் கூறியுள்ளனர். இதை விட திமுக., தொண்டர்களால் சிறப்பாக செய்லபட முடியும் என்று மேல்மட்டத்தில் தங்கள் கருத்துகளை பலரும் முன்வைத்துள்ளனர்.
முன்பெல்லாம் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள், கட்சித் தலைமையினால் நேர்காணல்கள் செய்யப் பட்டு தேர்வு செய்யப் படுவர். அப்போது பணம், சாதி, தொகுதியின் செல்வாக்கு, செலவழிக்கும் தன்மை உள்ளிட்டவை முக்கியக் காரணியாகக் கருதப் படும். இவர்கள் மாவட்ட செயலாளர்கள் அல்லது மண்டல வாரியாக நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு அவர்கள் மூலம் வேட்பாளர்கள் நேர்காணலுக்கு அனுப்பப் படுவர்! எனவே, மாவட்ட செயலாளர்களுக்கும் மண்டல பொறுப்பாளர்களுக்கும் மவுசு இருந்தது.
ஆனால் இந்த முறை ஐபேக் குழு பரிந்துரைக்கும் நபர்கள்தான் திமுகவின் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படுவர் என்று கூறப் படுவதாலும், எந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதற்கான புள்ளி விவரங்கள் திமுக தலைமைக்கு அளிக்கப்படும்; அதை வைத்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுவதாலும் திமுகவினர் இடையே, ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் திமுகவின் மாவட்ட அளவிலான செயலர்கள் நிர்வாகிகளுக்கும் கட்சிக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. முன்னர் கட்சித் தலைமையை சரி செய்யவும் கவனத்தை ஈர்க்கவும் கடுமையாக பாடுபட்ட பலரும், இப்போது ஐபேக் நிறுவனத்தை சரிக்கட்டினால் போதுமானது என்ற ரீதியில் இறங்கிவிட்டனர்
இதற்கு உதாரணமாக ஒரு தகவல் திமுக.,வினரிடையே கிசுகிசுக்கப் படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அரசுத் துறையில் பணி செய்யும் பணம் பாயும் துறையைச் சேர்ந்த பட்டியலினத்தவரான அந்தப் பரமக்குடிக்காரர், பரமக்குடியில் சட்டமன்றத் தொகுதியில் நிற்பதற்கு ரூ.10 கோடி, திமுக.,வுக்கு கொடுத்துள்ளதாகவும், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ள அவர் IPAC டீம் மூலமே காய்நகர்த்துவதாகவும் கூறுகின்றனர்.
இதனிடையே அதிமுக தலைமையோ, தேர்தல் ஆலோசனைக் குழு பரிந்துரைகள் ஏதும் இன்றி தாமாகவே தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டது. கடந்த சனிக்கிழமை சேலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெறும் என்று அறிவித்தார். தொடர்ந்து பொங்கல் பரிசாக ரூபாய் 2500 மற்றும் பல்வேறு இடங்களிலும் அடிக்கல் நாட்டு விழாக்கள், திட்டங்கள் அறிவிப்பு என்று இறங்கிவிட்டார்! எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் இருந்து திடீர் அறிவிப்பாக தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கிவிட்டாலும் அவர் செல்லும் இடங்களில் கூட்டம் அதிக அளவில் கூடத்தான் செய்கிறது

இன்னொருபுறம் ஹிந்து ஓட்டு வங்கி உருவாக்க பாடுபடுவதாக கூறிக்கொண்டு பாரதிய ஜனதா கட்சியினரும் பொதுமக்களை ஈர்ப்பதிலும் தங்கள் கூட்டங்களில் ஹிந்து உணர்வாளர்களை அதிக அளவில் திரட்டுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்!
பாரதிய ஜனதா கட்சியினர் நடத்திய வேல் யாத்திரைக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து கவனம் கொண்ட ஆளுங்கட்சி, என்னதான் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் அதை தாங்கள் விரும்பவில்லை என்ற வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகளை வேல் யாத்திரைக்கு போட்டது. மேலும், வேல் யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. யாத்திரைக்கு காவல்துறை மூலம் நெருக்கடிகளும் தடைகளும் போடப்பட்டன. இந்நிலையில் வேலி யாத்திரை முடிந்த கையுடன் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பிரசார இயக்கத்தை கையில் எடுத்துக் கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர்.
இதனைத் தொடர்ந்து, வெறும் தொலைபேசி தொடர்புகள் மூலமும் டிவிட்டர் மற்றும் வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மூலமும் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது என்பதை உணர்ந்துள்ள திமுக., மக்களை சந்திக்கும் வகையில் இன்னும் சில உத்திகளுடன் அவசர அவசரமாக புதிய வியூகத்தை வகுத்துக் கொடுக்குமாறு ஐ-பேக் குழுவை வற்புறுத்தியுள்ளது.
ஆனால், ஒரு நாள் முழுவதும் நேரம் எடுத்து கொண்ட ஐபேக் குழு, ஓரிரு யோசனைகளைக் கொடுத்தது. ஆனால் அந்த யோசனைகள், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப் பட்ட அதே யோசனைகள் தானாம்! “கிராம சபைக் கூட்டம்”, “குற்றப் பத்திரிக்கை” வாசித்தல் என எடுத்துக் கொடுக்கப் பட அது திமுக.,வினரை ரொம்பவே நோகடித்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
இந்த உத்திகளை வைத்துத்தான், ஆளுநரிடம் சென்று, தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை முன்வைத்து குற்றப்பத்திரிகை அளிப்பது என்று ஸ்டாலின் இறங்கியிருப்பதாகவும், இணையவழி உரையாடல்கள் மூலம் கட்சித் தொண்டர்களுடன் உரையாடுவதாகவும் கூறுகின்றனர்.
இருப்பினும், கடந்த தேர்தல்களில் மேற்கொள்ளப்பட்ட நமக்கு நாமே என்பது போன்ற பிரசாரங்களே அதிகம் பொதுமக்களை ஈர்த்தது என்றும், தற்போதைய ஐபேக் குழுவின் யோசனைகள் பெரிதும் ஈர்க்கப் படவில்லை என்றும் திமுக., நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் படியும் ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுக்காமல், குறிப்பாக வருமானவரித்துறையினர் இடம் போட்டுக் கொடுக்காமல் திமுக.,வின் வெற்றிக்காக மட்டுமே பாடுபட வேண்டும் என்று கெஞ்சினார் துரைமுருகன்.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக., நிர்வாகிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், கட்சித் தொண்டர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே நேரம் ஐபேக் நிறுவன ஊழியர்கள் வளாகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கட்சிக்காக வெகு காலம் உழைத்த தாங்கள் வெளியில் நின்று கொண்டிருக்க, கருப்புச் சட்டையுடன் ஐபேக் நிறுவன ஊழியர்கள் கூடி தங்களை மீறி உள்ளே சென்றது கட்சித் தொண்டர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. ஐபேக் நிறுவனம், திமுக.,வை வைத்து தமிழகத்தில் தாங்கள் காலூன்றி வருகிறது என்றும், வடநாட்டு நிறுவனத்தின் தயவில் திராவிடக் கட்சியை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது பெரும் பின்னடைவு என்றும் திமுக., தலைவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய போக்குகளால், ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக திமுக தலைமை தற்போது வருத்தப் படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது. வேறு வழியில்லை என்பதால், தேர்தல் முடியும் வரை ஐபேக் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் திமுக., உள்ளது என்றும், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு திமுக., தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர் திமுக., தலைவர்கள்!