அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினி மற்றும் மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும், இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம், ரஜினியின் 168-வது படமாக வளர்ந்து வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா, தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.
அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.
இதற்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தில் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றாா். அப்போது, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அண்ணாத்த படத்தில் ரஜினியின் கெட்டப் எப்படி இருக்கும் என்பதை அதன் மூலம் ரசிகர்கள் அறிந்து கொண்டு, அந்தப் புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ரஜினி தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவில் நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் சூழ்நிலை கருதி ரஜினி சென்னைக்குத் திரும்புவார் என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே கட்சி வேலைகளில் கவனம் செலுத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்காக, சன் பிக்சர்ஸிடம் அவர் கால்ஷீட் குறித்த விவகாரங்களில் அனுமதி கேட்டிருந்தார் என்று கூறப் படுகிறது.
இதனிடையே, இது குறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு டிவிட்டர் பதிவில் இதனை உறுதிப் படுத்தியிருக்கிறது.