
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் காலமானதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, பழைய அடையாறு மருத்துவமனையில் வைக்கப்பட உள்ளது. இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

டாக்டர் சாந்தா, புதுக்கோட்டை அருகே உள்ள திருமயம் நகரை பூர்வீகமாகக் கொண்டவர். பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்தா பஞ்சாபகேசன், தமது பணி நிமித்தமாக பூர்வீக நகரான திருமயத்தை விட்டு சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அதன் பின்னர் அவர்கள் குடும்பம் சென்னையிலேயே வசித்து வந்தது.
நோபல் பரிசு பெற்ற இரு விஞ்ஞானிகளின் குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் சாந்தா. விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா.

சாந்தா, 11-03-1927ல் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949ம் ஆண்டு மருத்துவப் பட்டமும் 1955 -ல் முதுநிலை மருத்துவப் பட்டமும் பெற்றார்.
1949 ம் ஆண்டில் DR. முத்துலெட்சுமி ரெட்டி (இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் – புதுக்கோட்டை நகரில் பிறந்தவர்). அந்த வகையில், புதுக்கோட்டை நகருக்கு இவர்களால் பெருமை.
இந்திய மகளிர் சங்கத்தின் மூலமாக புற்றுநோய் மறுவாழ்வு நிதியம் ஒன்றை தொடங்கி புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையை உருவாக்கினார். சிறிய குடிலில் 12 படுக்கைகள் கொண்டு தொடங்கப்பட்ட மருத்துவ மையம்தான் இன்று 8 ஏக்கர் நிலப்பரப்பில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ( Adayar Cancer. Institute) என பிரபலம் அடைந்துள்ளது.

தனது மருத்துவமனை மருத்துவர்களிடம் அவர் விடுத்திடும் கோரிக்கை “நோயாளிகளை மனிதர்களாக கருதுங்கள் மனிதர்களாக நடத்துங்கள். பல சரக்கு பொருட்களாக அல்ல” என்பதுதான். உலகில் எந்த நாட்டில் எந்த மூலையில் எந்தவொரு புற்றுநோய் ஆய்வு நடந்தாலும் சிகிச்சை முறை கண்டுபிடிக்கப் பட்டாலும் அதை அறிந்துகொண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகப்படுத்துவதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். டாக்டர் சாந்தா போன்றவர்களின் இடைவிடாத முயற்சியால்தான், சென்னை இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என போற்றப் படும் நிலைக்கு உயந்தது.
டாக்டர் சாந்தாவின் சேவையைப் பாராட்டி, மகசேசே விருது, பத்மஸ்ரீ விருது, பத்மவிபூஷன் விருது, தமிழக அரசின் ஔவையார் விருது என பல்வேறு விருதுகள் அவரை வந்தடைந்தன. விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தவர் டாக்டர் சாந்தா. அவரது லட்சியம், வாழ்க்கை தத்துவம் – To give and not to take ” என்பதே.
டாக்டர் சாந்தா உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். மேலும், இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலை.,யின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இருந்து தன் பங்களிப்பை நல்கியுள்ளார்.
புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.
டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .