
நம் தமிழ் தினசரி (www.dhinasari.com) தளம் (2021) தை மாதம் 1ஆம் தேதி பொங்கல் நாளில் 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
2014 நவம்பரில் நான் தினமணி இணையதளத்தின் செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியே வந்ததும், 2014 டிச.8ம் தேதி இந்த தளத்தின் பெயரைப் பதிவு செய்தேன். தொடர்ந்து தளத்தை வடிவமைத்து, 2015 ஜன.14 பொங்கல் நாள் முதல், தளம் இயங்கத் தொடங்கியது.
செய்தியாளர்கள் குழு, மொழிபெயர்ப்பாளர்கள் குழு, உதவி ஆசிரியர்கள் என முறையாக கட்டமைக்கப் பட்டு, இயங்கி வரும் நம் தினசரி தளம், SSS Media என்ற நிறுவனப் பெயரில், சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தில் பதிவு செய்யப் பெற்று, ஜிஎஸ்டி., உள்ளிட்ட அம்சங்களுடன் முறைப்படி இயங்கி வருகிறது.
பல்வேறு தலைப்புகளில் சிறந்த கட்டுரைகள், செய்திகள், தேசியக் கண்ணோட்டத்துடனான செய்திகள், உண்மைத் தகவல்கள், இந்து இயக்கங்களின் செய்திகள், தமிழ் மொழி, ஆன்மிக பாரம்பரிய கட்டுரைகள், பொழுது போக்கு அம்சங்களுக்காக சினிமா செய்திகள் உள்பட பல்வேறு பகுதிகளுடன் வெளியிடப்பட்டு வருவதை அறிவீர்கள்.
அரசியல் பின்னணி, நிதி உதவிகள் எதுவுமின்றி, விளம்பரங்கள் மற்றும் செய்திகள் பகிரல் மூலம் மட்டுமே கிடைக்கும் வருவாயைக் கொண்டு இயங்கி வருகிறோம்.
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்ற சிந்தனையுடன் இயங்கி வரும் நம் தளத்தின் 7ஆம் ஆண்டு தொடக்கம் என்பதால், 7 பேருக்கு நம் இணைய ஊடகம் சார்பில் விருதுகள் அளித்து கௌரவிக்க விரும்பினோம்.

தெய்வீகத் தமிழுடன், தேசியக் கண்ணோட்டத்துடன் ஒவ்வொரு துறையிலும் இயங்கும் தமிழர்களை தேர்ந்தெடுத்து கௌரவிப்பது என்பது நம் நோக்கம்.
ஏற்கெனவே தெய்வத்தமிழ் எனும் பெயரில் deivatamil.com – நம் ஆன்மிக தெய்வத் தமிழ் பதிவுகளை செய்து வருகிறேன்… தெய்வத்தமிழர் என்ற பெயரில் ஆன்மிக – தமிழை, தமிழரை அடையாளப் படுத்த எண்ணம்.
அதன் அடிப்படையில் நாம் பின்வரும் 7 பேருக்கு விருது அளிக்கலாம் என்று முடிவு செய்தோம்…
விருது தலைப்பு : தமிழ் தினசரி இணையம் வழங்கும், “தெய்வத் தமிழர்” விருது!
1. ராமஸ்வாமி சுதர்ஸன் (சென்னை வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பிரதமர் மோடியை தமிழ் நேயர்களிடம் உணர்ச்சிகரமாகக் கொண்டு செல்பவர், ஹிந்தியில் இருந்து தமிழில் பல நல்ல தகவல்களைத் தருபவர்)
2. ராஜி ரகுநாதன் Raji Ragunathan Raji(மொழிபெயர்ப்பாளர், தெலுங்கில் இருந்து பல்வேறு செய்திகள், ஆன்மிக இலக்கிய கட்டுரைகளை நம் தளத்துக்கு அளிப்பவர்)
3. ஜடாயு Jataayu B’luru(சமூக ஊடக செயற்பாட்டாளர், தேசியக் கண்ணோட்டத்தில் ஆன்மிகத் தமிழை அடையாளப் படுத்தி வருபவர்)
4. மதன் ரவிச்சந்திரன் Madan Ravi Chandran(காட்சி ஊடகவியலாளர், தேசியக் கண்ணோட்டத்துடன் கருத்துகளை முன் நிறுத்துபவர்)
5. அஸ்வத்தாமன் Asuvathaman Allimuthu(வழக்குரைஞர், தர்மம் காக்க தகுந்த வழக்குகளைத் தொடுத்து கவனம் ஈர்த்தவர்)
6. ஓவியர் வேதா(பாரதீய பாரம்பரிய கலாசார தெய்வீக ஓவியங்களைப் படைத்து வருபவர்)
7. பால.கௌதமன் Ramakrishna Gauthaman(ஸ்ரீடிவி , வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் மூலம் தேசியப் பிரசாரத்தை முன்னெடுத்து நடத்தி வருபவர்) – இவர்களுக்கான விருதுகள் வழங்குதல் நிகழ்ச்சி… ஜன.23 ஆம் தேதி சனிக்கிழமை, இன்று மாலை 6 மணிக்கு சென்னை, மயிலாப்பூர், கோகலே சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் தலைமை ஏற்று விருதுகளை வழங்குகிறார் பொருநைத் தமிழர், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், திரு. டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்குகிறார் தமிழ்க் காதலர், முன்னாள் டிஜிபி திரு. எஸ்.கே. டோக்ரா அவர்கள்.
சேர வாரும் ஜெகத்தீரே என இந்த நிகழ்வில் உறுதுணையாய் இருக்க அழைக்கிறோம்! நிகழ்ச்சித் தொகுப்பு நம் dhinasarinews யுடியூப் தளத்தில் பின்னர் பதிவிடப்படும்!