போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

சற்றுமுன் தமிழகம்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், திரும்பாத பட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீது நோட்டீஸ் அளித்து அரசு நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பள உயர்வு, போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும், அரசு ஒப்பந்தத்தை பல சங்கங்கள் ஏற்றுக் கொண்டன; ஆனால் தொமுச, சிஐடியு உள்ளிட்ட சில சங்கங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதனாலேயே மக்கள் அவதிப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.

இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும், பணிக்கு வராதவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்; ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். மேலும், ஆம்புலன்ஸ், நர்சுகள் போராட்டத்தின் போது பல அறிவுரைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது; வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்கள் விளக்கமளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகி சவுந்திரராஜன், “இது ஒருதலைப்பட்சமானது. எங்களின் கருத்தை எவரும் கேட்கவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்கு அரசுதான் பொறுப்பு. தொழிலாளர்கள் இல்லை. முதலில், அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.