ஆர்.கே.நகர் மக்களை பிச்சைக்காரர்கள் என்பதா?: கமல் மீது போலீஸில் புகார்!

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கேவலப்படுத்தியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், இது திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற கேவலமானது என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த வக்கீல் சிவா ஆருத்ரா என்பவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ‘‘வார இதழ் ஒன்றில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுதும் அத்தியாயத்தில் ஓட்டுக்கு பணம் வாங்குவது பிச்சை எடுப்பது போன்றதாகும் என விமர்சனம் செய்து உள்ளார். நானும், ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கேவலப்படுத்திய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறி இருந்தார்.

வாக்காளர்களைக் கேவலப் படுத்தி கட்டுரை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன் என்று போலீஸில் கூறப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.