spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்'தோழர்' தா.பாண்டியன்!

‘தோழர்’ தா.பாண்டியன்!

- Advertisement -
தா பாண்டியன்
தா பாண்டியன்

கடைந்தெடுத்த பிராமண துவேஷி… ஈவேரா சிந்தனைகளை சிவப்புத் துண்டால் போர்த்தியபடி வலம் வந்தவர்… இதெல்லாம் அவரது குணாதிசயம் சார்ந்த நிலைப்பாடுகளாக இருக்கலாம்!

ஆனால்…

திராவிட இயக்கக் காட்டுமிராண்டிகள் ‘கம்பராமாயணத்தைக் கொளுத்துவேன்’- என்றும்…

‘கம்பரசம்’ என்று எழுதியும் கம்பனைக் கொச்சைப்படுத்திய போது…

தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்தான் கம்பனை உயர்த்திப் பிடித்த நிலையில் அவருக்கு உற்ற தளபதியாக மேடைதோறும் கம்பனை விதந்து ஓதியவர்!

‘நடையின் நின்றுயர் நாயகன்’- என்று ராமனை அவரது கோணத்தில் ஒரு காவியப் பாத்திரமாக மட்டும் பார்த்து – ஆனால் அந்த ராமனின் மேன்மைகளை கம்பன் கழக மேடைகள் தோறும் முழங்கிய அபாரமான பேச்சாளர்!

பாரதியை ‘பார்ப்பனக் கவிஞன்’- என்று திராவிடத் தற்குறிகள் சாதியச் சிமிழுக்குள் அடைத்த போது…

பாரதி போற்றிய சமத்துவ சமூகத்தை…

பாரதி கண்ட புதுமைப் பெண்ணை – “நிமிர்ந்த நல் நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த நல் ஞானச் செருக்கும்”- இருப்பதால்…

பெண் எக்காலத்திலும் -“செம்மை மாதர் திறம்புவதில்லை”- என முழங்கியவர்!

வானொலி கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பாகவே – “காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கு ஓர் கருவி செய்வோம்”- என்ற பாரதியின் தீர்க்க தரிசனத்தை மேடை தோறும் முழங்கியவர்!

கங்கை காவிரி இணைப்பை பாரதி அன்றே கூறியதை – “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”- என்ற தீர்க்கதரிசனத்தை வியந்து பாராட்டியவர்!

பாஞ்சாலி செய்யும் சபதத்தின் புதுமையையும்…

பாஞ்சாலி சபதம் சூதாட்டச் சருக்கம் முழுவதும் பகடைகள் உருளுவது போன்ற சப்தத்திலேயே பாரதி அமைத்ததையும்…

இவரது வெண்கலக் குரலில் கேட்க வேண்டும்!

கலைஞரின் ஆட்சிக் காலத்தில் – (1989-91)- தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தங்குதடையின்றி நடமாடியதால்…

அதன் விளைவாக சென்னையில் பட்டப்பகலில் சகாரியா காலனியில் பத்மநாபாவும் அவரது 14 தோழர்களும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்!

அப்போது பத்மநாபாவுக்கு நடந்த அனைத்து எதிர்க்கட்சிகளின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி ஆட்சியின் அவலத்தையும், விடுதலைப் புலிகளையும் வறுத்து எடுத்தவர்!

அந்த கம்பீர உரை இன்னமும் பலர் காதுகளில் ரீங்கரிக்கிறது.

பிறகு 1991 தேர்தலில் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளராக (ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி) போட்டியிட்டு…

ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் ராஜீவ்காந்திக்கு அருகில் சில அடி தூரத்திலேயே நடந்து வந்ததால் மனித வெடிகுண்டுச் சிதறல்களை உடல் முழுதும் தாங்கி உயிருக்குப் போராடியவர்…

பிறகு கடுமையான உயிர்ப் போராட்டத்தில் பிழைத்து, வட சென்னை MP ஆகவும் வென்று…

அந்த நினைவுகளை – “ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்”- என்று புத்தமாக்கியவர்.

உடலில் துளைத்த சில குண்டுத் துகள்களை அகற்ற முடியாமல் அவற்றுடனேயே வலியைப் பொறுத்து வாழ்ந்தவர்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக வென்று- ராஜீவ் வெடிகுண்டு கொலைக்குப் பின் – நாடாளுமன்றம் சென்றபோது….

எந்தக் காங்கிரஸ்காரரும் அணுகி விசாரிக்காதபோது பாஜக தலைவர் வாஜ்பாய் மட்டுமே கொள்கைகளில் எதிரியாக இருந்தாலும்…

அருகில் வந்து கருணையோடு ஆறுதல் கூறி விசாரித்து நலம் வாழ வாழ்த்தியதை தனது புத்தகத்தில் நேர்மையாகப் பதிவு செய்தவர்!

இனி எங்கு கேட்போம் அந்த வெண்கலக் குரலை?!!

வெண்கல மணியின் நாதத்தில் நீங்கள் படம் பிடித்துக் காட்டிய “நடையின் நின்றுயர் நாயகன்” ராமனையும், தமிழ் எழுத்தில் “அத்தனை எழுத்தையும் ஆயுத எழுத்தாக்கிய”- பாரதியையும் இனி எங்கே கேட்கப் போகிறோம்?

நடிகர் விசு இறந்த போது – “பார்ப்பனப் பாம்பு செத்தது”- என்று எழுதிக் களித்த ‘முற்போக்கு’ கள் சிலரின் கயமைத்தனம் எமக்கு இல்லை!

அப்படி மரணத்திலும் மகிழும் கீழ்த்தரம் எங்களுக்கு இல்லை!

ஈவேராவின் சிந்தனைகளை சிவப்புத் துண்டுக்குக் கீழே சுமந்து – இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படை உட்பட அத்தனையும் எதிர்த்த…

பிராமண துவேஷிதான் நீங்கள்!

ஆனால் கல்லூரி மேடையானாலும் – கலை இலக்கியப் பெருமன்ற மேடை ஆனாலும் – கம்பன் கழக மேடை ஆனாலும்…

திராவிட இயக்கத்தவரின் ‘கம்பராமாயண வெறுப்புக்கு’ ம் – பாரதி மீதான திராவிடத்தாரின் காழ்ப்புக்கும்…

உங்கள் ஆசான் ஜீவானந்தம் காட்டிய வழியில்…

தக்க பதிலடி கொடுத்து…

பாரதியையும், கம்பனையும் எங்களைப் போன்ற 1970 – 80 களின் மாணவத் தலைமுறைக்கு அடையாளம் காட்டியவர் நீங்கள்!

உமது நா இன்று அடங்கியது!

ஆனால் அது ஒலித்த தேமதுரத் தமிழோசை என்றும் எமது இதயத்தில் பாரதியாய், கம்பனாய், இளங்கோவாய் ரீங்கரிக்கும்!

சென்று வாருங்கள்….

‘தோழர்’ தா.பாண்டியன்!

(நாங்கள் நம்புகிற) வானுலகில் உங்கள் ஜீவாவுடனும், கம்பனுடனும், பாரதியுடனும் செந்தமிழால் கொஞ்சி மகிழுங்கள்!

கருத்து:  முரளி சீதாராமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe