
மதுரை அருகே 4 வயது சிறுவனை தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவர் அடுத்து உதைத்து, துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் என்ற நபர், மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊர்மெச்சிகுளம்குளம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 20 வயதான சுகன்யா என்ற மனைவி, விஜய கிருஷ்ணன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், முருகன் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனையடுத்து, தனது மகளை உறவினர்கள் வளர்த்து வரும் நிலையில், அவரது மகனுடன் சுகன்யா வசித்து வருகிறார்.
இதனையடுத்து, சுகன்யா சமீபத்தில் தனது உறவினர் கஜேந்திரன் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சுகன்யாவின் இரண்டாவது கணவர் கஜேந்திரன், சுகன்யாவின் மகன் விஜய கிருஷ்ணனை மது அருந்தி விட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், அந்த அப்பாவி சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்துள்ளார். இதற்கு சிறுவனின் தாய் சுகன்யாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, விஜய கிருஷ்ணன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, கஜேந்திரன் மற்றும் சுகன்யா அவரை கடுமையாக தாக்கி இழுத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அந்த பகுதி மக்கள் சமயநல்லூர் போலீசாரிடம் சிறுவனுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி புகார் அளித்தனர்.
இந்நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலில் தீக்காயங்களுடன் இருந்த சிறுவனை மீட்டு கருமாத்தூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், சுகன்யா மற்றும் அவரது இரண்டாவது கணவர் கஜேந்திரனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.