spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்தர்ம சங்கடமா? கடக்க இதைக் கூறுங்கள்!

தர்ம சங்கடமா? கடக்க இதைக் கூறுங்கள்!

- Advertisement -
karnanan
karnanan

மகாபாரதத்தில் பதினேழாம் நாள் யுத்தம். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் கடும் போர் நிலவிக் கொண்டிருந்த வேளையில் கர்ணனின் தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கி கொண்டது.

“நான் தேர்ச் சக்கரத்தை விடுவிக்கிறேன். பின் போரைத் தொடருவோம். அதுவரை என்னைத் தாக்காதே அர்ஜுனா!” என்றான் கர்ணன்.

ஆனால் கண்ணபிரான் “அர்ஜுனா! இது தான் சரியான சந்தர்ப்பம். நீ உன் கணைகளைத் தொடுத்து அவனைக் கொல்!” என்றார். பாணத்தைப் பிரயோகிக்கத் தயாரானான் அர்ஜுனன்.

அப்போது கர்ணன், “அர்ஜுனா! நில்! இது தர்மமாகுமா? கொஞ்சம் பொறு!” என்றான். கண்ணன் கர்ணனைப் பார்த்து, “கர்ணா! உனக்குக் கூட தர்மம் என்ற சொல் இருப்பது தெரியுமா? தர்மத்தைப் பற்றி நீ இப்போது பேசுகிறாயே! சிறுவயதில் நீங்கள் எல்லோரும் சேர்ந்து பீமனுக்கு விஷம் வைத்த போது நீ கூறும் தர்மம் எங்கே போனது? அரக்கு மாளிகையில் பாண்டவர்களை எரிக்க திட்டமிட்ட போது நீ கூறும் தர்மம் எங்கே போனது?..”

” பொய்ச்சூதில் பாண்டவர்களை வீழ்த்திய போது உன் தர்மம் எங்கே போனது? அபலைப் பெண்ணான திரௌபதியைச் சபை நடுவே அவமானப்படுத்திய போது இந்தத் தர்மத்தைப் பற்றி பேசினாயா? இதிலெல்லாம் உனக்குச் சம்பந்தம் இல்லை என்று கூறித் தப்பிக்கப் பார்க்காதே! துரியோதனன் செய்த ஒவ்வொரு தவறின் போதும் நீயும் உடனிருந்தாய்..”

” பதின்மூன்று வருடங்கள் தண்டனை முடிந்த பிறகும் பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தைத் தர மறுத்தீர்களே! அப்போது தர்மம் எங்கே போனது? சிறுவனான அபிமன்யுவைச் சக்கர வியூகத்துக்குள் வைத்துப் பலர் தாக்கிக் கொன்றீர்களே! அப்போதெல்லாம் தர்மம் என்ற ஒன்று இருப்பது உனக்கு தெரியவில்லையா? உனக்குத் தேவையான சூழ்நிலைகளில் மட்டும் தர்மத்தைப் பற்றிப் பேசுவாய், தேவையில்லாத சூழ்நிலைகளில் தர்மத்துக்கு விரோதமாகச் செயல்படுவாய்! இதுதானே உன் கொள்கை?” என்றான்.

மேலும், “அர்ஜுனா! திரௌபதி என்னும் அபலைப் பெண் அன்று அவமானப்பட்டபோது அவளுக்கு உண்டான வலியையும், அபிமன்யு என்ற சிறுவன் அநியாயமாகக் கொல்லப்பட்ட போது அவனுக்கு உண்டான வலியையும் இவன் உணர வேண்டுமென்றால் இப்போது நிராயுதபாணியாக நிற்கும் போது இவனைத் தாக்க வேண்டும். அதுவே இவனுக்குச் சரியான தண்டனை!” என்றான் கண்ணன்.

அர்ஜுனன் எய்திய பாணம் கர்ணனின் கவசத்தைத் துளைத்துக் கொண்டு அவன் மார்பில் பாய்ந்தது. கர்ணன் மாண்டு போனான். (கர்ணனின் உயிர் பிரியாமல் அவனது புண்ணியங்கள் காத்ததாகவும், அந்தணர் வடிவில் கண்ணன் வந்து அந்தப் புண்ணியங்களைத் தானம் வாங்கியதாகவும் பிரசித்தியாகச் சொல்லப்படும் கதை வியாச பாரதத்தில் இல்லை.)

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம், “தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.

அப்போது சூரிய பகவான், “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.

“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம். அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய்.

“அதனால்தான் அழிந்தாய் தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்ததர்மம் தான் அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா?

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின் ஆசைக்குப் பரதன் உடன் பட்டானா? மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும். அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள். கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம். “வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe