
யூடியூப் சேனல் பிரபலம் சாப்பாட்டு ராமன், கீழ்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுக்கப்பட்ட அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொற்செழியன். இவர் சித்த மருத்துவம் படித்தவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்பன் என்ற பெயரில் சொந்த ஊரில் கிளினிக் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ‘சாப்பாட்டு ராமன்’ என்ற பெயரில் ஒரு யூ ட்யூப் இணைய சேனல்- ஐ உருவாக்கி அதில் இவர் சாப்பாடு வரும் அழகை பார்த்து இவருக்கு யூட்யூபில் வரவேற்பு அதிகமானது.

3 கிலோ மஸ்ரூம் பிரியாணி, முழு கிடா விருந்து, 9 பிளேட் சாப்பாடு மற்றும் பீஷ் கிரேவி, அஞ்சு கிலோ மட்டன் பிரியாணி என்று பலரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு அதிக உணவுகளை கை நிறைய அள்ளி அள்ளி சாப்பிட்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தார். அதனால் அவர் சாப்பாட்டு ராமன் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
இப்படி அதிகமான உணவுகளை அவர் சாப்பிடுவதற்கும், சித்த மருத்துவம் படித்தவர் என்பதால் அது ஜீரணமாவதற்கு சில மருந்துகளை சாப்பிடுவதாகவும் அதை பயனர்களுக்கும் தெரிவித்து டிப்ஸ் கொடுத்து வந்தார். இதனால் சாப்பாட்டு ராமனுக்கு வரவேற்பு அதிகமாகிக்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் பீதியில் இருப்போருக்கு சில ஆங்கில மருந்துகளை சொல்லி அவற்றை சாப்பிட சொன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றிருக்கிறது.

இதையடுத்து நேற்று அவரது கிளினிக்கில் சோதனை நடத்திய போது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆங்கில மாத்திரைகளை பறிமுதல் செய்து சாப்பாட்டு ராமன் கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.
இதன்பின்னர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சாப்பாட்டு ராமன் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு நீதிமன்ற விசாரணையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் இன்னும் தெரியவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.
மேலும் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.