karur vaccine2
karur vaccine2
  • கரூரில் கொரோனா தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளி இல்லாமல் குவிந்த பொதுமக்கள்
  • டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்ததால் அதிகாலை முதல் காத்திருந்த பொது மக்கள் மருத்துவரிடம் வாக்குவாதம்
  • அடுத்து 7ம் தேதி தான் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்ததால் டோக்கன் கேட்ட பொதுமக்களால் பரபரப்பு

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்திற்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பு 16,500 டோஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில் 500 டோஸ்கள் மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கரூர், கடவூர் உள்ளிட்ட 6 இடங்களில் 500 டோஸ்கள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக கரூர் நகரில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 150 டோஸ்கள் காலை 9.30 மணி முதல் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இன்று அதிகாலை 4.30 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8.30 மணியளவில் அங்கு வந்த மருத்துவர் திவ்யா, ஏற்கனவே 2 முறை வந்து டோக்கன் வாங்கியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் மற்றவர்கள் கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

karur vaccine
karur vaccine

ஆனால், கலைந்து செல்ல மறுத்த பொதுமக்கள் இதை ஏற்கனவே அறிவித்து இருந்தால் நாங்கள் ஏன் அதிகாலை முதல் காத்திருக்கிறோம் என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு, அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு 6ம் தேதிக்கும் மேல் தடுப்பூசிகள் வரும்பட்சத்தில் போடப்படும் என தெரிவித்து காத்திருக்க வைத்திருந்தனர்.

அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டி அடித்துக் கொண்டு காத்திருந்தனர். ஏற்கனவே டோக்கன் பெறப்பட்டவர்களை வரிசையில் நிற்க வைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 1 மணி நேரத்திற்கும் மேலாக டோக்கன் வாங்க காத்திருந்த பொதுமக்கள் பொறுமை இழந்து மீண்டும் மருத்துவரை அணுகி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் இனி முதலில் வரும் 150 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் டோக்கன் வழங்கப்படாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் இது வரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 859 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending